vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Monday, March 7, 2016

பயணத்தில் தவறிய முகம்

பயணத்தில்  தவறிய  முகம்
வைதீஸ்வரன்
 டில்லியில் மொபஸல் ஊர்களுக்குப் போகும் பஸ் நிலையம்  
பகல் வேளைகளில்  மனிதர்களை வேகவைக்கும் பாயிலர் 
மாதிரி  புழுங்கு கிறது.  தலையிலும்  உச்சியிலும்  ஒரே புழுதி.  புகைச்சலின் நெடி. தரையெங்கும்  உபயோகம் தீர்ந்த  பான்பராக்குகளின்  நெடி.

ஹரித்வார் போகும் பஸ்ஸுக்குள்  பிரக்ஞையுள்ள எந்த 
மனிதன்ஏறி உட்கார்ந்தாலும் அரைமணி நேரத்தில்  மூளை 
மங்கிய வனாக  காய்கறி மூட்டையாக  மாறிவிடுவான்.  பஸ்
புறப்படாமல்  ஒரு  யுகம்  நின்றுகொண்டிருந்தாலும் யாருக்கும் உரிமையுடன்  கேள்வி  கேட்கவேண்டுமென்ற  நியாயமான 
கோபதாபங்கள்  எழவே எழாது.

 ஒரு வழியாக  பஸ் புறப்பட்டு விடுகிறது.  டெல்லி முனிஸி
பாலி டியைத் தாண்டும் வரை  கூடவே ஒரு  சாக்கடை ஆறும்  
வீர்ய முள்ள  நாற்றத்துடன் நம்மைத் துரத்தி வருகிறது. 

கங்கையின் புனித ஓட்டத்தை  எதிர்நோக்கும்  பயணிகளுக்கு  
அந்தஅனுபவத்தை  பன்மைப்படுத்திக் காட்டுவதற்காக  இது  
டெல்லி முனிஸிபா லிடியே  செய்த  விசேஷ  ஏற்பாடாக  
இருக்கலாம்.


 ஒரு  ஐந்தாறு வருஷங்களுக்குள்  ஹரித்வாரின்  நெடுஞ்
சாலைகள்  அகலம்  குறைந்து போன மாதிரி  தோன்றுகிறது.  
சாலைநெடுகிலும் போக்குவரத்து  அவ்வளவு  அதிகரித்து  
விட்டது.

 நாகரீகத்தின்  தொழில் வளர்ச்சியின் ஆக்கிரமிப்பு  இமய
லைத்  தனிமையை  விழுங்கிக் கொண்டது. 

 சாலையின்  இருமருங்குகளிலும்  சர்க்கரைக்காகவே 
வளரும் கரும்போ கரும்பு!!  வீசும் மலைக் காற்றின் 
கிசுகிசுப்பால் வயல்கள் சதா முதுகை நெளித்துக் 
கொண்டே இருக்கின்றன.. அவ்வப் போது  சில வயல் 
பரப்பில் அறுவடைக்குக் குனிந்த பெண்கள்  நிலத்தில்  
ஏதோ புதையலைத் தேடுவது  போல் நகருகிறார்கள். 

 யாரும்  ஏறிப் பார்க்க முடியாத  உயரமான  கட்டிட 
உச்சிகளில் அழுக்குக் கிழவர்கள்  போல்  கழுகுக் 
கூட்டங்கள் அரைத் தூக்கத்தில்  உட்கார்ந்திருக்கின்றன. 

பாயில் விசிறி விட்ட வெண் சோழிகள்  போல் வெள்ளைக் கொக்குகளின்முதுகுகள்  ஆங்காங்கு  வயல்களில்  சிலிர்த்து 
நிற்கின்றன.

எப்போதாவது  பிரயாணிகளை  நிலை குலைய வைக்க  
சாலையோரப் பள்ளங்களில்  சக்கரங்கள்  நான்கையும்  பரப்பிக்கொண்டு மல்லாந்து கிடக்கும் சில லாரிகளைப் 
பார்க்க நேரும்போது அதை  ஓட்டி வந்த  முகம் தெரியாத 
அந்த  லாரி ஓட்டிகளின் விதியைக் கற்பனைசெய்ய  
முயலும்போது  பஸ்ஸிலிருந்து சடக்கென்று குதித்து விடத்  தூண்டுகிறது.  மரணபயம்.

இருந்தாலும்  அந்த  கொடுமையான  காட்சிகளை  மறக்க
டித்துநமது மனசைக் குஷிப்படுத்த  நிறைய வேடிக்கைகள் 
பாதையின் இரு மருங்கிலும்  இரைந்து  கிடக்கின்றன.

அதோ  பாருங்கள். முரட்டுப்பாவாடையுடன் வண்ணப் 
படுதாவை முக்காடாய் போட்டுக் கொண்டு  வண்டி 
வண்டியாக  கிராமத் துக்  கிழவிகள்  கங்கா ஸ்நானத்துக்குப் 
போய்க் கொண்டிருக்கிறார்கள். 

முசாபிர்பூரைக் கடக்கும் போது  அங்கே தெருக்கள்  ஓடை 
போல்  சிறுத்துப்போகின்றன. மக்கள்  காற்றில் நடப்பார்
களோ!!  

 அங்கங்கே கிடைத்த ஓரச்சுவர்களில் ஆணியடித்துக் கண்
ணாடி  மாட்டி கிடைக்கிறவர்களை  முக்காலியில்  உட்கார 
வைத்து  முக க்ஷவரம்  செய்து விடுகிறாரகள்  மீசை  வைத்த  நாவிதர்கள். 

 நடு நடுவே  சில  கடைகளில்  தோல் பை துருத்திகளால்  
உலை நெருப்பு ஊதி  இரும்பை அடித்தி இஷ்டம்போல் 
வளைத்து வண்டிச் சக்கரங்கள் கடப்பாறைகள்  கடையாணிகள் அறுவாள்கள் இவற்றை செய்கிறார்கள்  
ஜிப்ஸி உடையணிந்த கொல்லர்கள்.

 லாரிகள் ஒன்றையொன்று கடக்கும்போது  ஓட்டிகளின்  
வாயிலிருந்து சரளமாகக் கெட்ட  வார்த்தைகள்  வருகின்
றன.


ரித்வாரை நெருங்க நெருங்க சாலைகள் எங்கும்  
நனைந்  மக்கள்  அல்லது  நனையப் போகும்  மக்கள்....  
காவி உடை அணிவதற்கு  எதுவும்  விசேஷத் தகுதிகள் 
தேவையிருப்பதாகத் தெரியவில்லைகாவியுடை  அணிந்து   
பீடி சுருட்டுகள்  பிடிப்பதால் தர்மம்கெட்டுவிட்டதாக யாரும்  
சஙகடப்படுவதில்லை.  சுற்றிள்ள காற்றுக் கெட்டுப்போவதை 
பற்றிய  கவலையும் அவர்களுக்கு தோன்றுவதில்லை.

 கோடைப்  புழுக்கம்  நிறைந்த  ஈரக்காற்று  கங்கைக் கரை
முழுவதும் உஷ்ணத் திரைகளைப்  போர்த்தி யிருந்த்து.  
அடைமழை வரலாமோ!


எங்கோ உயரத்தில்  இருட்டுக்குகைக்குள்  துளித்துளியாய் 
கிளர்ந்து இங்கே அகன்ற மார்புடன்  விரிந்து  பொங்கி  மர்ம
மான  சூட்சும விசையால்  காலங்  காலமாய் பாயும்  இந்த  
மகா நதியைப்பார்க்கும் போது  பயங்கரக் கவர்ச்சி ஏற்படு
கிறது.

அதன்  ஓட்டத்தின் இயல்பான  காந்த ஈர்ப்புகளிலிருந்து  
என்னைக் காப்பாற்றிக்கொள்ள  நான்  கற்படிகளைப் 
பிடித்துக்  கொள்ளுகிறேன்.

முன்னொருதடவை   பல ஆண்டுகளுக்கு முன்  தொழில் 
நிமித்தம் காசி வரை  போய் விட்டு கங்கையில்  ஒரு  முழுக்
குக் கூடப் போடாமல்  திரும்பி யிருக்கிறேன்.  இப்போது  
அதற்குப் பிராயசித்தம்  செய்ய வேண்டும் !!

இங்கே  குளித்தால்  பாவம் போய் விடும். போய் விடுமாம். 
ஜன்மம் சாபல்யம் அடையும் அடையுமாம்.

இரண்டுமே  நமக்கு  தெளிவாகத் தெரியாத  குழப்பமான  
விஷயங்கள்  நமது  சராசரியான சாதாரண வாழ்க்கையில்  
பிரத்யேகமாக  புண்ணியங்கள்  எதுவும்  செய்யவில்லை..
பாவங்களை தெரிந்தே செய்திருந்தாலும் அதற்கு  காரணம்  நானில்லை என்று தப்பித்துக்  கொள்ளத்  தான் யோசனைகள்  தோன்றுகிறது.


நமது  இந்தக் குறுகிய வாழ்வுக்குள்  ஏகப்பட்ட  பசிகளையும் பேராசைகளையும், காரியங்களை செய்து முடிக்காதபடி முட்டுக்
கட்டையான  சமூகச் சூழலையும்  ஏற்படுத்திவிட்டுஆண்டவன் 
பாவ புண்ணியங்களையும்  வேறு நம்மைப் பார்த்துக் கொள்ளச் சொல்வது  ஆகாத  காரியமாகப் படுகிறது. 

 கங்கைக்கரையின் முதற்படிகளில் உட்கார்ந்துகொண்டு  இந்த 
மாதிரியான அநாவசியமான  விசாரங்களில்  ஈடுபடுவதிலிருந்து 
சற்றே கலைந்தேன். 

எனக்குப் பக்கத்தில் ஒருவர்  “கங்கா  மாதா..கங்கா மாதா..
என்று கழுத்தை முக்கி முக்கி எடுத்துக்கொண்டிருந்தார்..

 பாவமோபுண்ணியமோ  சரீரம் அன்றாடம் அழுக்கை சேர்த்துக் கொண்டுதான்  இருக்கிறது.  கெட்டவனாயிருந்தாலும் நல்லவ னாயிருந்தாலும் மனிதன்  குளிக்க வேண்டியது  அவசியமாக இருக்கிறது.

 நான்கு படிகள்  கீழே இறங்கி ஓடும் ஆற்றுத் தண்ணீரில் 
மூழ்கி எழுந்தேன்.  “ஜிவ்வென்று உடல் முழுதும்  சூடு பரவி  சிலுசிலுத்து  ஆனந்தம் பரவியது.  பார்வைக்கு சுற்றியிருந்த  காட்சிகள்  குளுமையாகி  ஈரமாய்த் தெரிந்தது. 

என்னோடு  சேர்ந்து  இந்த  ஊரும்  ஒரு  முழுக்குப்  போட்டது போல்  பளிச்சென்றிருந்தது.  நான் கரையேறினேன்.


 ஹரித்வாரிலிருந்து  திரும்பி  டெல்லிக்கு வருவதற்கு சுமார் 
ஆறுமணி நேரம் பிடித்தது. அங்கே நான்  வாங்கிய  நீளக்கை
சந்தனக் கலர் ஜுப்பாவும்  பைஜாமாவும் போட்டுக் கொண்டு 
டெல்லி பஸ் ஸ்டாண்டில் கைப்பெட்டியுடன் நின்றேன்.

 Isbt   பஸ் ஸ்டாண்டு  முன்பு கண்டது போலவே புகை மூட்ட
மாக இருந்தது. அங்கேயிருந்து  எனக்கு டெல்லி ரயில்வே ஸ்டேஷனுக்குப் போக வேண்டும்.  ரயில்வே ஸ்டேஷனுக்கு போகிற  பஸ்ஸில் ஏற எங்கே போய் நிற்க வேண்டும்எந்த இடத்தில்  இறங்க வேண்டும்இந்த  விவரங்களை  யாரிடம்
போய் விசாரிப்பதுசுற்று முற்றும் பார்த்து  நடந்துவந்தேன். புதிய  ஊரில் தவறான ஆளை  விசாரிப்பதினால் நேரக்கூடிய அபாயமும்  அடி மனதில்  கிலேசத்தை உண்டு பண்ணியது.

 உடனடித் தேவைகளுக்கு சில்லறை இருக்கிறதா  என்று  ஜுப்பா வின்  இருபுறமும்  முழங்கால் ஆழத்துப்  பாக்கட்டுகளில்  குலுங்கிக் கொண்டிருந்த  காசுகளை அடிக்கடி தொட்டுப்பார்த்துக்கொண்டேன். 
 எனக்கு  ஓரளவு  கொச்சையாக  ஹிந்தி  பேசத் தெரியும். சமாளித்து  விடலாம் என்று நினைத்தேன்.

எனக்குப் பக்கத் தில்  அப்போதுஉயரமாக  மாநிறமாக  ஒரு  வட நாட்டுக்காரர்  வந்து  நின்றார்.  சுமார்  ஐம்பது  வயது இருக்கும். 
அவரை விசாரிக்கலாம்  என்று  தோன்றியது.என்னுடைய 
கொச்சை ஹிந்தியிலும்  மீதி  ஆங்கிலத்திலுமாக...

 அவர்  ஹிந்திக்காரராக  இருந்தாலும் ஆங்கிலத்தில் பதில்
அளிக்கத் தயங்காதவராக  இருந்தார். 


  “நான்  ஹரித்வாரிலிருந்து  வருகிறேன்.  டெல்லி ரயில்வே ஸ்டேஷனுக்குப் போக   பஸ்  இங்கே வருமா?”  ஹிந்தியில் 
ஆரம்பித்தேன்.

  “அப்படியாநல்லது.   நானும்  அதே பஸ்ஸில்  தான்  ஆபீஸுக்
குப் போகவேண்டியிருக்கிறது.  அதொ! அங்கே தான் பஸ்
ஸ்டாப் வாருங்கள்.”  என்று  ஹிந்தியில்  சொல்லி  என்னை
அழைத்துக்கொண்டு போனார்.

  நான் பின் தொடர்ந்தேன்.

இங்கே தான்  பஸ் நம்பர் 383  வரும்   வர  வேண்டிய  நேரம்
தான்..” ...சிறிது  மௌனத்துக்குப் பிறகு   “ பத்து மணிக்கு  நான்
ஆபீஸில் இருந்தாகவேண்டும். ஆனால்  இந்த  பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருக்கும்  ஆனாலும்  இதைத்  தவற விடக் கூடாது.  “ 
என்று அதே ஹிந்தியில்   பேசினார்.

 ஒரு  மாற்றத்துக்காக  “ ரயிவே ஸ்டேஷன் ரொம்ப தூரமோஆட்டோவில் போனால்  அதிகமாகுமோ? “  என்று ஆங்கிலத்தில் கேட்டேன்.

அவரும் ஆங்கிலத்தில் பதில் சொன்னார்.  “சே...  சே..எதற்கு 
செலவழிக் கிறீர்கள்நான் போகும் அவ்ழியில் தான்  ஸ்டே ஷன்.  நீங்கள்  எங்கே இறங்க வேண்டுமென்று  நான் முன்கூட்டியே   சொல்லி விடுகிறேன்..”   என்றார்.

 மனதுக்கு பாரம் குறைந்த மாதிரி இருந்தது.  இப்படி ஒரு  வழித்துனை  கிடைத்ததும்  கங்கைக் குளியலின் பலன்
தானோ!..

நான்  “தேங்க்ஸ்”  என்றேன்.

இது  ஒரு பெரிய உதவியல்ல.  எனக்கும்  தெரியாத  ஊருக்குப்
போனா இப்படி உதவி  தேவைப் படலாம் இல்லையா? அதோ பஸ்..வந்து  விட்டது.  முதலில்  தாவிஏறினால்  தான்  பஸ்ஸுக்
குள்  இடம் பிடிக்க முடியும்.  முதலில் நான் தாவிவிட்டு  உங்க ளுக்கும்  இடம் பிடிக்கிறேன்..என்றார்  அவசர  ஹிந்தியில்.

 பஸ்  பொறுமையற்று உதறிக் கொண்டிருந்தது.  ஜன நெரிசலை அலட்சியப் படுத்தியவாறு  பழக்கத்தால் அவர் லாகவமாகத் தாவி  பஸ்ஸின் முன் ஸீட்டில்  இடம்  பிடித்துக்  கொண் டார்.  எனக்காக  பக்கத்தில் ஸீட்டையும் பிடித்துக் கொண்டு  நான்  ஏறுவதைப் பார்த்துக்  கொண்டிருந்தார்.

 “நீங்க  இல்லேன்னா..எனக்கு  இப்படி  உக்கார  இடம் கிடைத்தி
ருக்காது...நான்  ஹிந்தியில் சொன்னேன்  அவருக்கு அது இசைவாக  இருக்குமோவென்ற  நினைப்பில்.

 “பரவாயில்லே...ஒருவருக்கொருவர்  ஒத்தாசை  தான்..”...  ..
ஹிந்தி....

பஸ்  கிளம்பியது.

அவர்  தொடர்ந்தார்.  “  இன்னும் அஞ்சு  ஸ்டாப்  தாண்டியவுடன் 
நீங்க இறங்க வேண்டிய  இடம்  வந்து விடும்.  நான்  சொல்றேன். 
அங்கே இறங்கி  எதிர்  திசையில் நேரு  சிலைக்குப்  பக்கத் தில்  உள்ள  ஸ்டாப் பில்  ஒரு ஆட்டோ பிடித்துக்  கொள்ளுங் கள்.  மூணு  கிலோமீட்டர்  தான்.  ஸ்டேஷன் வந்து  விடும்...
சரியா?..” என்றார். 

  ஒரு பழகிய  நண்பரைப் போல  முன்பின் தெரியாத  நம்மி டம்  இவ்வளவு  பாசமாக  இருப்பதை எண்ணி  நெகிழ்ச்சியாக 
இருந்தது.

அப்போது  கண்டக்டர்  நெருங்கி வந்து  “டிக்கட்”  என்றான்.

 என்  நீள  ஜுப்பாவின் வலது பாக்கட் சீட்டுக்கும்  நிற்கும்  பயணி
களுக்கும்  இடைபட்ட வெளியில்  மாட்டிக்கொண்டது  நான்  தடு மாறித்  தாமதித்தேன்  அவர்  தயங்காமல்  “ பரவாயில்லே  ஸார்..” 
என்று எனக்கும்  சேர்த்து  டிக்கட்  வாங்கி விட்டார்.

  “உங்களுக்கு  எப்படி  நன்றி  சொல்வதென்று   தெரியவில்லை..என்றேன்  மீண்டும் ஹிந்தியில்.

இவ்வளவு  நல்ல  வடநாட்டுக்காரர்    நம்ம  ஊர் பக்கம்  வந்தால் 
பாஷை தெரியாத  பலஹீனத்தை  சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு  எந்த  ஆட்டோக்காரரும்  இவரை ஏமாற்றித் திண்டாட 
விடக் கூடாது  என்று  பிரார்த்தித்துக் கொண்டேன். அப்படிநேர்ந்தால் அவர்  நம்ம  ஊர்  ஜனங்களைப்பற்றி  எவ்வளவு  கேவலமாக 
நினைத்துக்  கொள்வார்

 ஒருவன் செய்த  மோசடியால்  அவன்  ஒட்டு மொத்த சமூக த்தைப்  பற்றிய   அபிப்ராயமே  எவ்வளவு மோசமாக  மாறி விடுகிறது?    அழிக்கமுடியாத  பூடகமான  இன வெறுப்பு களை  எவ்வளவு  ஆழமாக    மனத்த்துக்குள்  வளர்த்து 
விடுகிறது?”   என்று நினைத்துக்  கொண்டேன்.
   
 நான்  இறங்கவேண்டிய  இடத்தில்  பஸ்  நின்றது.நான்  கைப் பெட்டியுடன்  இறங்கினேன்.

மறக்காமல்  எதிர்த்திசைக்குப் போய் வண்டி பிடித்துக்  கொள் ளுங்கள்.”  என்றார்  அவசரமாக உரத்த  ஹிந்தியில்.

  நான்  அவரை  நெருங்கி  ஜன்னல்  வழியாக  நன்றியுடன்  கை
குலுக்கினேன்.

 பஸ் புறப்பட  யத்தனித்தது.

ஸார்...ஸார்...”  அவர்  பஸ்ஸிலிருந்து  என்னை  அவசரமாக 
அழைத்தார். 
 “நீங்கள்  ஒரு  உதவி   செய்ய வேண்டும்.  இந்த தபால் கார்டை  தபால்  பெட்டியில்  போடாமல்  மூன்று  நாளாக  அது என்னிடமே  இருக்கிறது.  மீண்டும்  இன்று மறந்து  விடக்  கூடும். 
அதோ! அங்கே  உள்ள  தபால்  பெட்டியில்  இதை  போட்டு விட முடியுமா? “  என்றார்.

 அவருக்கு உதவி செய்ய  ஒரு  சின்ன  சந்தர்ப்பம்.  ஆர்வமுடன் வாங்கிக் கொண்டேன்.  “ஜரூர்...ஜரூர்..”  என்று  ஹிந்தியில்  தாராள
மாக  ஆமோதித்து  கார்டை வாங்கிக்கொண்டேன்.

 பஸ் கர  ஆரம்பித்ததும்  கையிலிருந்த  தபால்  கார்டைப்  பார்த் தேன்.  அது  முத்து முத்தான  தமிழில்  எழுதப்பட்டிருந்தது! அடியில்  இப்படிக்கு  அன்பு  அண்ணன்  ராமனாதன்!!  என்று  அவரு
டைய  பெயர்  இருந்தது.   ஊர் விலாஸம்   மாயவரம்.

 திகைப்புடன்.... போய்க் கொண்டிருக்கும்  அந்த  பஸ்ஸை  சற்று நிற்காதா  என்ற  ஏக்கத்துடன்  பார்த்தேன்.

க்ஷணநேரத்துக்குள்   அவரைப்  பற்றிய  அடையாளத்தைப்  புரட்டிப் 
போட்டு எனக்கு  நெருக்கமாகி விட்ட  நம்ம  ஊர் ராமனாதனை மேலும்  மேலும்  என்னிடமிருந்து  பிரித்துக்  கொண்டு போய்க் கொண்டிருந்தது  அந்த  பஸ்.... . 

ஒரு  வார்த்தை தமிழில்  பேச முடியாமல் பிரிந்து  விட்டோமே !

கணையாழி  மார்ச்  2016

.


    .   . 

No comments:

Post a Comment