vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Wednesday, April 27, 2016

இட ஒதுக்கீடு - வைதீஸ்வரன்

இட ஒதுக்கீடு


            வைதீஸ்வரன்   


பிளாட்பாரத்தில்  முக்கால்  மணி நேரமாக  உட்கார்ந்திருந்தோம்.  இரவு
பத்து மணிக்கு புறப்படுகிற  ரயில்  அஞ்சு நிமிஷம் கழித்துத்தான் பிளாட்
பாரத்துக்கு வந்து நின்றது.  வெளியே ஒட்டியிருந்த  பெயர் பக்கத்தை சரி
பார்த்து கைப்பெட்டியுடன்  உள்ளே தள்ளாடி  முட்டி மோதி நகர்ந்து  என்
ஸீட்டை ஒரு வழியாய்க் கண்டுபிடித்துவிட்டேன்.  அதில்  ஏற்கனவே
சற்று வயதானவர்.

   “அம்மா....இது  என் ஸீட்டு   9.  ...”

அந்த மாது என்னை   ஏறிட்டுப் பார்த்த வண்ணம்  சற்றும் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.

 “அம்மா....  இதோ பாருங்கள்...என்  டிக்கட்டு......இது  என்  ஸீட்டு.. A9 நீங்கள்  
தவறாக  உட்காந்திருக்கிறீர்கள்....

இது  என்  ஸீட்டு  ஸார்..  நீங்கள்  தான்  தப்பாக  சொல்லுகிறீர்கள்.  நான் 
பார்த்து விட்டுத்தான்  உட்கார்ந்திருக்கிறேன்...”  அந்த  அம்மாள் மிக நிச்சய
மாக  அழுத்தமாக  சொல்லிவிட்டு  சாய்ந்து உட்கார்ந்துகொண்டாள்.
மேலும் என்னுடன் பேச விரும்பாதவள்  போல்.

  “இல்லை..மேடம்... இதோ பாருங்கள்  என்  ஸீட்டு நம்பர்   9 ..”

 “ நீங்கள்  என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்.  9  என்  ஸீட்டுத்தான்.. கம்பார்ட்மெண்ட் நம்பர்  பி2..........உங்களுடையது  வேறாக  இருக்கலாம்.

  நான்  சொன்னேன், மீண்டும்  டிக்கட்டைப் பார்த்துவிட்டு.. “இல்லை மேடம்... 
என்  டிக்கட்டு  இதோ...எனக்கும்  கம்பார்ட்மென்ட்  பி2 தான்.. நீங்கள்  தப்பாக 
வந்து விட்டீர்கள்.

இல்லை  இது என்  ஸீட்டுத்தான்  ..டி டிஆரிடம்  போய் சொல்லுங்கள்...

  “இல்லை  மேடம்  நீங்கள்  தான்  தவறாக,,,,”

அந்த  மாது  உரத்த குரலில்  பேசினாள். .. Don’t disturb me…Go away. I cannot    
vacate.   This  is  my  Seat…” அவள்   ஒரு வேளை  ஓய்வு பெற்ற 
கல்லூரி பிரின்ஸிபாலாக  இருக்கலாமோ!!

நகராமல்  வழியை  அடைத்துக்கொண்டு நான்  அந்த  மாதுவிடம்  வாதாடிக் கொண்டிருந்ததை மேலும் பொறுத்துக்கொள்ளா முடியாமல் உள்ளே வர 
முடியாத  பயணிகள்  கத்தினார்கள்.

 “மிஸ்டர்  வழியை  விட்டுட்டு  சண்டை போடுங்க....நாங்க  உள்ளே போக  வேண்டாமா?“

 “ஸார்  என் ஸீட்டு  A9 பாருங்க...இவங்களும்  அதே நம்பர்னு  சொல்றாங்க.. 
பாருங்க.. “   நான்  என்  டிக்கட்டை  அவர்களிடம்  காட்டினேன்.

 பயணிகளில் ஒரு  இளைஞன்.  கம்ப்யூடர்  பையனாக  இருப்பான்
போலும்.    “ஸார்... உங்க  டிக்கட்டை  கொடுங்க....”    

கொடுத்தேன்.

சரியா  இருக்கு....அம்மா...ஒங்க  டிக்கட்டைக் கொடுங்க...

 தயக்கத்துடன்  சற்றுக் கோபமாக  அவள்  டிக்கட்டைக் கொடுத்தாள்.

  “அம்மா  ஒங்க  ஸிட்  நம்பர்  கம்பார்மென்ட்  நம்பர்  எல்லாம்  சரியாத் தான்...இருக்கு........

அந்த அம்மாள்   கோபத்தோடு  குறுக்கே பேசினாள் :

Tell  this   bloke   I  have  the  correct   Seating…Bloody  nuisance”

அந்தப்  பையன்  அவளைக் கையமர்த்தி விட்டு  சொன்னான்.  

 Wait  Madam..  நான்  சொlல்றதை  கேட்டுட்டு  பேசுங்க...நீங்க  உக்காந்த  ஸீட் 
சரியானது  கம்பார்ட்மெண்ட் சரிதான். ஆனா.  ஒக்காந்த  ரயில்  தான்  வேறெ! 
இது  25630.   நீங்க  ஏறவேண்டிய  வண்டி  25360.  அதோ  அந்த  நாலாவது 
பிளாட்பார்த்திலே  நிக்குது....இந்தாங்க  டிக்கட்...

அந்த  அம்மாளின்  முகம்  சிவந்து  பதறியது.  தலையைக் குனிந்தவாறு 
 “ What  a  confusion…Oh!  Hell…”  அவள்  எழ முடியாமல்  எழுந்து தடுமாறி 
நின்றாள்.

அவள் பெட்டியையும்  பைகளையும் அவசரமாக   சிலர் தூக்கி வெளியே இறக்கி வைத்தார்கள்.

  அவளையும்  ஒருவன்  கைத்தாங்கலாக  இறக்கிவிட்டான்.

அவள் நிலைமையப்  பார்க்க  எனக்கு பரிதாபமாக  இருந்தது.  அவளை
கண்ணாடி வழியாகப் பார்த்து  “SORRY “  என்றேன்.

 அவள்  என்னைப் பார்க்க விரும்பாமல்  கோபமாகத்   தலையைத்
திருப்பிக்கொண்டாள்.

அவள்  யார் மீது  கோபப்பட வேண்டுமோ!................. 

  நாலாவது  பிளாட்பாரத்தில் அவள்  ஏறவேண்டிய ரயில் ஒரு குலுக்க
லுடன் நகர்ந்து  கொண்டிருந்தது...............



  ...


No comments:

Post a Comment