*வைதீஸ்வரன் கதைகள்" என்கிற தலைப்பில் என் கடந்த ஆண்டுகளின் உரை நடை பங்களிப்புகள் இப்போது கவிதா வெளியீடாக பிரசுரமாகிறது. சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்கும். அத் தொகுப்பில் இருந்து ஒரு கதை இங்கே ----
*****************
அம்மா பார்த்த சினிமா!
வைதீஸ்வரன்
முத்துவேலன் புரண்டு புரண்டு
படுத்துக்கொண்டிருந்தார். தூக்கம்
வரவேயில்லை.. மனதிற்குள் காட்சிகள் ஒவ்வொன்றாக முன்னும் பின்னுமாக ஒலியும் ஒளியும்
மாதிரி ஓடிக் கொண்டே இருந்தது.
“அந்த நான்காவது “ஷாட்டில் ஒரு வேளை கதாநாயகனை பக்கவாட்டில் எடுத்திருக்கலாமோ! கதாநாயகி ஹீரோவுடன் நெருக்கமாக அந்த வசனம் பேசும்போது உதடுகளை மட்டும்
காண்பித்திருக்கலாமோ!“
என்றெல்லாம் பலவித சந்தேகங்கள் சலனங்கள் அவருக்குள் பலஹீன
மாக எழுந்து மடிந்துகொண்டிருந்தன.
எப்படியும் அவருடைய இயக்கத்தில் இந்த மூன்றாவது படம் ஓரளவுக் காவது ஓடியாக வேண்டும். இரண்டாவது படம் படு
தோல்வி. முதல் படம் ஏதோ அவரே நம்பமுடியாமல் அப்படி ஒரு ஓட்டம் ஓடியது.
இன்னும்ஒரு வாரத்தில் படம் வெளியாகபோகும் தேதியும் அறிவிக்கப்
பட்டுவிட்டது. இந்தப் படம்
பொறுத்த வரையில் சென்ஸார் பிரச்னை
இருக்காது என்று நம்பலாம்.
முத்துவேலன் மீண்டும் புரண்டு
படுத்தார். கைக்கடிகாரத்தைப் பார்த்தார்.
மணி ஐந்தாகி இருந்தது. பக்கத்தில் அவர்
மனைவி கவலையற்று தூங்கிக் கொண்டிருந்தாள். இவர் அப்படி நிம்மதியாகத் தூங்கி பல நாட்கள்
ஆகிவிட்டன.
வெளிச்சம் வந்து விட்டதாவென்று வாசலுக்குப் போய் சற்று நேரம்
நின்று பார்த்துவிட்டு கூடத்துக்குள் நுழையும் போது டெலிபோன் மணி
அடித்தது. இந்த நேரத்தில் யார்?
“ஹலோ” என்றார். அவர் தம்பி தான்....கிராமத்திலிருந்து..!
“என்னடா? இந்த நேரத்துலே? அம்மா நல்லா இருக்காளா? “
“ அம்மாவைப் பத்தி சொல்லத் தான் போன் பண்ணினேன்..”
“என்ன?..என்ன.?..” பதற்றமுடன் கேட்டார் முத்து.
“ அண்ணா...காலையிலே அம்மாவை பஸ்லே ஏத்தி விட்டுட்டேண்ணா! ..
அங்கே சாயங்காலம் ஆறரை மணிக்கு வந்துடுவாங்க....ஸ்டாண்டுக்கு
வந்து கொஞ்சம் கூட்டிக் கிட்டு
போயிடுங்க..”
முத்துவுக்கு மனசு ஜிவ்வென்று கொதித்தது.
“சே,,... “ஏண்டா.. ..அம்மாவை
இங்கே அனுப்பறதுக்கு நேரம் காலம்
இல்லையா? எனக்கு படம் ரிலீஸு.....ஆயிரம் வேலை இருக்கு..ஆயிரம்
டென்ஷன்...இப்போ தொணதொணப்பா அந்த வயசானவளை ஏண்டா
இங்கே அனுப்பி வைச்சுருக்கே!”
“அண்ணா...நானும் அம்மா கிட்டெ ஆனவரைக்கும் சொல்லிப் பாத்தேன். கண்கலங்கி அழுகறா! என் பையன் எடுத்த
படத்தை அவன் கூட பாக்கணும்னு ஆவலா இருக்குடா! என்னை ஏண்டா தடுக்கறே!
என்னை அனுப்பிச்சுக் கொடுக்கறதிலே ஒனக்குஎன்னடா தொந்தரவுன்னு
விடாமெ புலம்பிகிட்டே இருக்காண்ணா!...பாவமா
இருக்கு.”
“என்னடா பாவம்...............முதல்லேயே என்கிட்டெ பேசச் சொல்லி யிருந்தா நான் வர வேண்டாம்னு கண்டிப்பா சொல்லியிருப்பேன்
இல்லையா?...
“பாவம்ண்ணா..”
முத்து பட்டென்று போனை வைத்து
விட்டுத் திரும்பினார்.... அவர் மனைவி பின்னால் நின்று
கொண்டிருந்தாள்.
“கேட்டியா..சேதியை..”
“ பாவம் ஆசைப்படறாங்க......வந்துட்டுப்
போவட்டுமே! நான் பாத்துக்
கறேன்..”
முத்துவேலனுக்கு இதற்கு மேல் அந்த விஷயத்தை தொடர விருப்ப
மில்லை . சாத்தியமும் இல்லை... “எப்படியோ போங்க..!” என்றுதான் அவர்
மனசுக்குள் சொல்லிக்கொண்டு போயிருப்பார்.
****
இயக்குனர் முத்து வேலனைப் பார்க்க படம் சம்பந்தமானவர்களும் பத்திரி
கைக் காரர்களும் வருவதும் போவதுமாக இருந்தார்கள்.
தயாரிப்பாளர் சொன்னார்..” முத்து...இன்னிக்கு ராத்திரி குறிப்பிட்ட
திரைப்பிரமுகர்களுக்கு படத்தை ப்ரிவ்யூ போட்டுக் காட்டலாம்னு இருக் கேன். ராத்திரி பத்து
மணிக்கு சரியா வந்துடுங்க..”
முத்துவேலனுக்கு மகிழ்ச்சியும் பரபரப்பும் கூடியது.. படத்தின் விசேஷ அம்சங்களைப் பற்றி பதியும்படியாக பத்திரிகைக்காரர்களிடம் நிறைய பேச
வேண் டும்..” என்று நினைத்துக்கொண்டார்.
“சரோஜா.....இன்னிக்கு
ராத்திரி பத்து மணிக்குப் படம்
போடறாங்க....நீயும் வா...நல்லா இருக்கும் ? மனைவி பட்த்தைப் பார்க்க
வேண்டுமென்று
அவருக்கு ஆவல்..
“சாயங்காலம் உங்க அம்மா வந்துடுவாங்க..”
முத்துவுக்கு அந்த விஷயம் மறந்தே போய்விட்டது. “ அடக் கரு....மே! ..முணுமுணுத்துக் கொண்டபடி “அதுக்கு என்னை என்ன பண்ண சொல்றே!’ படத்தை நிறுத்திடலமா?..”
“ நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம். நான் சாயங்காலம் போய் அம்மாவைக் கூட்டிகிட்டு
வரேன். ராத்திரி அம்மாவையும் படம் பாக்க அழைச்சிக்கிட்டு
வரேன் ..நீங்க ஒங்க வேலையைப் பாருங்க..”
முத்துவேலனுக்கு மறுபேச்சு
சொல்வதற்கு எதுவுமில்லை.
இரவு படம் ஓடிக்கொண்டிருந்தது. முத்துவேலன் ஓடிக் கொண்டிருந்த
படத்தைவிட பார்ப்பவர்களின் முக உணர்வுகளைக் இருட்டில் கண்டறியப் பாடுபட்டுக்
கொண்டிருந்தார். அடிக்கடி பின்வரிசையில்
உட்கார்ந்திருந்த
அவர் மனைவியையும் அம்மாவையும் ஒரு
பார்வை பார்த்தார். பார்த்த போதெல்லாம் அம்மா அரைக்கண் மூடிக்கொண்டிருந்ததாகத்தோன்றியது.
“இங்கெ வந்து தூங்கறதுக்கு இவ்வளவு பிடிவாதமா வரணுமா?’
படம் முடிந்தது. அவரவர்கள் முத்துவிடம் கைகுலுக்கி விட்டு
போனார்கள்.
படம் பிரமாதமாக இருப்பதாகத் தான்
எல்லோரும் சொல்லிக்கொண்டு போனார்கள். எல்லோரையும் சந்தித்துப் பேசிவிட்டு வீடு திரும்புவதற்கு
நள்ளிரவுக்கு மேல்
ஆகிவிட்டது.
வீட்டிற்குள் நுழைந்தபோது அவர் மனைவி ஏற்கனவே தூங்கிக்கொண்டி ருந்தாள். அவள் அபிப்ராயத்தைக் கேட்க முடியவில்லை.
அம்மாவுக்கு சினிமா எதுவும் புரிந்திருக்காது!..
சமையலறைக்குப் போய் ஏதோ சாப்பிட்டுவிட்டு கூடத்தில் மங்கலான
வெளிச் சத்தில் சோபாவில்
யோசனையுடன் உட்கார்ந்துகொண்டு சிறிது
நேரம் கண்னை மூடிக் கொண்டிருந்தார்.. படம் வெளியாகும்
வரை மனசுக்குள் இப்படித்தான் ஏதோ படபடப்பு இருக்கத்தான் செய்யும்
என்று நினைத்துக் கொண்டார்
“முத்தூ...முத்துக் கண்ணூ...” யாரோ ரகஸியமாகக் கூப்பிடும் குரல்...
அம்மா தான்! மெல்லிய குரலில்..ரொம்பத்
தயக்கத்துடன் கூப்பிடுகிற குரல்
முத்துவேலன் கண்ணை விழித்து திரும்பிப் பார்த்தார். அம்மா அவள் அறைக்கதவை லேசாகத் திறந்து
கொண்டு இருட்டில் நின்றுகொண்
டிருந்தார்.
“என்னம்மா....இந்த நேரத்துலே ..தூக்கம் புடிக்கலயா?...சினிமாவுலேதான்
உக்காந்து நல்லாத்
தூங்கிட்டியே?. என்ன விஷயம்?....”ஹி..ஹி..’
“இல்லெடா..கண்ணு சினிமாவை நல்லா விவரமாப் பாத்தேண்டா.
அதை ..உங்கிட்டே ஒடனே சொல்லிடணும்னு தான் ராத்திரி பூராவும் கண்முழிச்சி ஒக்காந்துருக்கேன்......நீ சாப்பிட்டியாடா...கண்ணு..”?
“ எல்லாம் ஆச்சு..
அம்மா.....இப்போ என்ன சொல்லப் போறெ?”
முத்துவின் அறையில் தூங்கிக்கொண்டிருக்கும் சரோஜாவின் தூக்கம்
கலைந்துவிடக் கூடாதென்பது போல் அம்மா அவனிடம் சமிக்ஞை
செய்தாள்.
“முத்து.... கொஞ்சம் உள்ள வரயாடா...ஒரு
விஷயம் ஒங்கிட்டே மட்டும் சொல்லணும்.”
அம்மாவின் அழைப்பு அவருக்கு ஸ்வாரஸ்யமாக இல்லை. அலுத்துக்
கொண்டவாறு.. அவள் அறைக்குப் போனார். அம்மா முத்துவின்
பக்கத்தில் உட்கார்ந்து கையைப் பிடித்துக்கொண்டார்.
“என்னம்மா....விஷயம் ? சும்மா..இழுத்துப்
பேசாம சீக்கிரம் சொல்லு””
கையை விடுவித்துக் கொண்டார்.
“ராசா...படம்..நல்லாத் தான் எடுத்துருக்கேடா..! ஆனா....ஒண்ணே
ஒண்ணு....ஒரே ஒரு கொறை தாண்டா எனக்குத் தெரிஞ்ச மட்டிலே!.... சரி பண்ணீடுவயாடா!!........
“ கொறையா?...அதென்ன கொறை கண்டு
பிடிச்சே நீ..! .”
“ படம் வெளிலெ வர இன்னும் எத்தனை நாளு இருக்குடா?“
“ உனக்கு என்ன அக்கறை அதிலே? இன்னும் நாலு நாளு இருக்கு.
அது சரி குறை
இருக்குன்னு சொன்னியே..அதைச் சொல்லு! “
“அப்ப... உனக்கு சங்கடம் இருக்காதுடா.......
சொல்றேன்..”
சொல்லு ..சீக்கிரமா..சுத்தி வளைக்காம..”
“ஏண்டா. சின்ன வயசுலே
உனக்கு எத்தனை தடவை நரகாசுரன்
கதை சொல்லியிருக்கேன்.. ஞாபமிருக்கா?”
“ஆமா..அதுக்கென்ன இப்போ? கதை பேசறதுக்கெல்லாம் இப்போ
நேரம் இல்லே..சீக்கிரம் சொல்லு.”
“இல்லெடா....அந்த ஹீரோயினி நடு ராத்திரியிலே ஜன்னல்
பக்கமா நின்னுகிட்டு ஏதோ சோகமா பேசறாளே! அதென்ன? “
“ நீ தான் பாத்தியே! நீயே சொல்லேன்!“
“ நாளை விடிஞ்சா தீபாவளி ஊரெங்கும் ஜகஜ்ஜோதியா
இருக்கப்போற
இந்த நேரத்துலே என் வாழ்க்கை
மட்டும் ஏன் இருண்டுபோய்விட்டது? அப்படீன்னு கண்ணுலே நீரோட
பேசறாளே..அந்த ஸீனைத்தான்
சொல்றேன்...”
“அடே பரவால்லியே!
அம்மா...டயலாக்கை கரெக்டா கவனிச்சிருக்கியே!
அது சரி ..அதுலே என்ன கொறையைக் கண்டு
பிடிச்சே? “
“ அட மண்டுப் பைய்யா....அவள் ஜன்னலோரமா நின்னு பேசும் போது வெளிலே வட்டமா வெளிச்சமா ஒரு நிலாவைக்
கட்டித்
தொங்க விட்றுக்கயே......அந்தக் கண்ராவியைத் தான் சொல்றேன்”
“என்ன சொல்றே..நீ..” பதற்றமுடன் கேட்டார்.
“ புரியல்லியா? எத்தினை தரம்
சொல்லியிருக்கேன். தீபாவளிக்கு மறு நாளு அம்மாவாசைடா.!! அதுவும் பூரண அம்மாவாசை. பித்த்ருக்களுக்கு
பிண்டம் போடறே அம்மாவாசை!! ...தீபாவளிக்கு மறு நாள் பௌர்ணமி
எப்படி வரும்? ..இந்த அபத்தத்தை எவனாவது கண்டு பிடிச்சான்னா உனக்கு ரொம்ப அவமானப்
போயிடும்டா..”
முத்துவேலன் அதிர்ச்சியுடன் ஊமையாகி அம்மாவைப்
பார்த்துக் கொண்டே நின்றார். வார்த்தைகள் வரவில்லை. மிக மோசமான தவறு நிகழ்ந்துவிட்டது. ..
அவர் கண்கள் ஈரமாகிக்
கொண்டிருந்தது. அம்மாவுக்கு எப்படி நன்றி சொல்ல இயலும்? அம்மாவின் கையைப் பிடித்துக்
கொண்டு தலை குனிந்து நெற்றியில் வைத்துக் கொள்ளும்போது அவர் மனைவி பின்புறம்
நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்த அபத்தமான காட்சியை அவசர அவசரமாக
அழித்துவிட்டு மீண்டும் சரியாக்கிப் படமெடுக்க சரியாக இரண்டு நாட்கள் தேவையாக
இருந்தது.
No comments:
Post a Comment