vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Wednesday, September 14, 2016

நானும் தமிழ்க்கவிதையும் வைதீஸ்வரன் (1973)

         நானும்  தமிழ்க்கவிதையும்

வைதீஸ்வரன்  1973



  {*1973ல்  திருச்சியில்  “நானும் தமிழ்க்கவிதையும் என்ற  தலைப்பில்  ஒரு  பெரிய இலக்கியக் கூட்டம்  நடைபெற்றது.  பல  ஊர்களிலிருந்து கவிஞர்கள்  வரவழைக்கப் பட்டு  நிறைய வாசகர்களும்  ஆர்வலர்களும்  ஆவலுடன்  கலந்து கொண்ட  நிகழ்வு அது.

 திருச்சி  ஆல்பர்ட்  வெளி ரங்கராஜன்  அம்ஷன்குமார்  இவர்கள் இக்கூட்ட்த்தை  ஏற்பாடு செய்யும் பணியில் முக்கிய பங்கெடுத்துக்  கொண்டார்கள்  இவர்களை  நான்  முதன் முதலாக சந்தித்த்தும்  அப்போது  தான் அன்று  நான்  வாசித்த  கட்டுரை  எனக்கு மீண்டும்  கிடைத்தது... விருப்பமுள்ளவர்களின்  வாசிப்புக்காக  இங்கே  தருகிறேன் _ வைதீஸ்வரன்  1973


 “நானும்- தமிழ்க்கவிதையும்”  இந்த் தலைப்பு  என்  மனதில் சில தனிப்பட்ட சிந்தனைகளைக் கிளறி விட்டிருக்கிறது. நானும்-தமிழ்க்கவிதையும்என்ற தலைப்புக்குப்  பதிலாக  “நானும்-கவிதையும்என்ற  தலைப்பே எனக்கு  இணக்கமாகத் தோன்றுகிறது.

  இதற்குக் காரணம்  எனக்கு  கவிதைகள்  தெரிந்த  அளவு  தமிழ் தெரியாது.!! இப்படிச் சொல்லும்போது  நான்  வெறும் அதிர்ச்சிக்காக சொல்லவில்லை, எனக்குள் அடிக்கடி எழும் ஒரு  தனிப்பட்ட  ஆனால்  உண்மையான  முரண்பாடு  தன்  இது.

   நான்  கவிதைகள்  தமிழில்  எழுதுகிறேனே தவிர  தமிழ்க்கவிதை எழுதுவதான  அப்பட்ட மான  உணர்வு எனக்குள்  எழுந்த்தில்லை!!  இது  என்  மன நிலை.. 

    சின்ன வயதிலிருந்தே  பாடல்கள்  எழுத  வேண்டுமென்ற இயல்பான ஆர்வமும் அதில்  தீராத  சந்தோஷமும் நான்  தெரிந்து  கொண்ட  தமிழினால் நேர்ந்த்தே தவிர கற்றுக் கொடுக்கப்பட்ட  தமிழினால்  அல்ல!

  எனக்குத் தெரிந்த  தமிழ்  பண்டிதக் குரல்கள் தொடாத தமிழ் வகுப்பு வட்ட்த்திற்கு  கல்லூரிப் பரிட்சைகளுக்கு எட்டாத வெளிக்காற்றில் சுதந்திரமாக ஒலிக்கும்  தமிழ். நான்  என்  ஏழாவது  வகுப்பிலேயே  தமிழ் வகுப்பைக் கைவிட்டிருந்தேன். 

 கூடப் படித்த பையன்  சம்ஸ்குருதம் படிக்கப் போனதால்  அவன் தோழமையைப் பிரிய  மனமில்லாமல்  நானும்  அவன் கூடவே  போய் விட்டேன்.  அப்போது தமிழ் எடுத்துக்  கொண்ட  சகமாணவர்கள்  தமிழ் மொழியில்  கம்ப ராமாயணமும் புறநானூற்றுக்களையும் படித்துக்  கொண்டிருந்த போது  நான் ஸமுஸ்கிருதத்திலே  ஆனா  ஆவன்னா  படித்துக்  கொண்டிருந்தேன்  பிறகு  கல்லூரியில்  காளிதாஸனும்  வால்மீகியும்  அடியெடுத்து  வைத்த  பின்  தான் அந்த  மொழியின்  ஆரம்ப  சிக்கல் களைக் கடந்து  அதில் புதைந்து கிடக்கும்  இலக்கிய நயத்தையும் அழகியல்களையும் கலை நேர்த்தியையும் ஓரளவு அனுபவிக்க முடிந்தது.

 ஆக  நான்  தமிழை  முறையான  சரித்திரப் பார்வையுடன்  பாட்திட்டங்களைப்  படித்து பரிட்சை தேறிக்கற்றுக் கொண்டவனல்ல..  இந்த பலஹீனத்தை  மீறிக் கொண்டு அல்லது சௌகரியத்தை உட்கொண்டு எழுதப் பட்டவைகள்  தான் என்  கவிதைகள்.  இதை  பலஹீ னம்  என்று  நான் சொல்லக் காரணம் எனக்கு கவிதை எழுதும் போது வார்த்தைகள் சரளமாக்க் கொட்டுவதில்லை. ஏதோ புகை மூட்டமாக அல்லது  கனவுக் கூச்சலாகத்  தான்  தெரிகிறது.

 சில  சம்பவங்களின்  அனுபவங்களின் எதிரொலிக்கு  இணைந்த  வார்த்தைகளை  நான் ஓயாமல்  தேடுகிறேன். தில் சில  சமயங்களில் வெறியும் பல சமயங்களில்  தோல்வியும் ஏற்படுகின்றன  இதற்கு  ஒரு  வேளை  என்  குறைந்த  தமிழ் ஞானத்தை  அல்லது  தமிழ் ஞாபகத்தைக் காரணம் கூறலாம்  அதே சமயம்  வகுப்புத் தமிழைக்   முறையாகப் படித்த்தனால்  இன்றைய கவிதைகளில் சிலர் அவஸ்தைப் படுவதைப் பார்க்கு போது என்  நிலை  ஓரளவு  வரவேற்கத் தகுந்த  பலஹீனமாகவே படுகிறது.

இந்த  நிலையினால்  தானோ என்ன்னவோ  நான்  முதல் முதலாக  கிணற்றில் விழுந்த  நிலவை கீழிறங்கித்  தூக்க சொன்ன போது  என்  அக்கரை முழுவது  நிலவில் மேல் இருந்த்தே ஒழிய அது  ஏதோ புதுக் கவிதை  இயக்கத்திற்கு இசைவான  ஒரு படைப்பாக  அமைந்த்தென்ற  பிரக்ஞை  எனக்கு  ஏற்படவில்லை. . 

 ஒரு  இயக்கத்தின் பின்புலன்கள் அதிகம்  பரிச்சயமாகாத நிலையில்  நேரடியாக  தற்கால வாழ்வினால்  அதன்  ஓசைகளால் தூண்டப்பட்டு  எனக்குத் தெரிந்த  தமிழில் ஆர்வத்தால்  உந்தப்பட்டு  என்னை  வெளிப்படுத்திக்  கொண்டது  தான்  என்  கவிதைகள்.

   வகுப்புக்கு  வெளியே  நான்  கேட்டுத்  தெரிந்து  கொண்ட  கம்பராமாயண சிலப்பதிகார நயங்கள்  எனக்குள்  மிகுந்த  ஆவலைத்  தூண்டும்  அனுபவமாகக் கரைந்து  போயிருக்கிறது.  விடுமுறை நாட்களில் ஒரு தமிழ் படிக்கும் நண்பனுடன் சேர்ந்து  கொண்டு  வீட்டின்  கொய்யாமரத்துக்குக் கிளையில்  கவிதைப் புத்தகங்கள் படிப்பதும் பேசிக் கொண்டிருப்பதும் உண்டு.. அப்போது  சங்க இலக்கியங்களை  அதன் கடினமான  தமிழ்  காரணமாக  என்னால்  நெருங்க முடிந்ததில்லை  அதன்  அருமை பெருமைகளை  பிற்காலத்தில்  தான்  அறிந்து  கொள்ள  முடிந்தது.
 அப்போது  தமிழ் இலக்கியத்தில்  நான்  அதிகம்  படித்தது  ராமலிஙக ஸ்வாம்கள் ஆழ்வார்கள்  நாடோடிக் கவிஞர்கள்  தனிப் பாடல்கள்  பிறகு  விசேஷமாக  பாரதி யார்  நம்  எல்லோருக்குமே பரிச்சயமானவர்கள் தான்.

 இவர்களில்  அநேகமாக  எல்லோருமே  செய்யுளை  விட்டு நகர்ந்து பாடலுக்கு  வந்த  கவிஞர்கள். இவர்கள்  கவிதைகளில்  தொனிக்கும்  ஒரு  வித   effort ess  Musical   ஓசை அப்போது  என்னைக் கவர்ந்தது.

தட்டுப்பாடற்று  இப்பாடல் வரிகள் வார்த்தை வெள்ளமாகத் திரண்டு  உருண்டோடும் ஓசையில் ஒரு  வசிய  நிலை கிடைக் கிறது.  ஆனால்  இந்த  வசிய  நிலை  ஒரு  கால  எல்லைக் குள் ஒரு  கருத் தின்  வட்டத்துக்குள் அடங்கிப்போய்விடுகிறது. இவற்றை அனுபவிக்க  பரவசமான  மனோபாவங்கள் தேவையாக  இருக்கின்றன.

 சூழும் வாழ்க்கையை நேருக்கு நேர்  விழிப்புடன்  நோக்காமல் சற்று அரைக் கண் மூடிய  நிலையிலேயே இவைகளை  அனுபவிக்க  நேருகிறது. இந்த  நிர்ப்பந்தங் களை  மீறி  சில பாடல்கள் ஒர் உயர்ந்த   கவித்துவ நிலையையும் எட்டுகின்றன. .

 ஆனால்  இந்தத்  தலை முறைக் கவிஞர்களில் என்னை மிகவும்  பயமுறுத் தியவர்கள்  அருணகிரி நாதரும்  பட்டினத்தாரும்  தான். மனிதப் ;பிறவியை  வேதனையான ஜன்ம்மாக ஒரு விதமான  குற் உணர்வுடன் வாழ்வின்  மீது  இவர்கள்  துப்பு கிற  {மன்னிக்கவும் ] எச்சல் வாசகன்  மேல்  தெறிப்பது  போல்  தோன்றுகிறது.

 உலக ஜீவராசிகளின்  அதிசயமான  உறவுகளை அன்புத் தத்துவத்தை அலங்கோலமாக்கி நம்மை  நாயும்  பேயும்  ஆக்கி குற்றவாளிக் கூண்டில்  நிறுத்தி  வைக்கிறார்கள். இவர்களுக்குப் பின்பு வந்த  பாரதியாரால்  நாம்  எல்லோருமே  ஓரளவுக்குத்  தூண்டப்பட்ட வர்கள்.

 முன் தலைமுறைக் கவிஞர்களின்  பரவசத்தன்மையும் spiritual insightம்  பாரதிக்கும்  இருந்தாலும் அவன்  ஆளுமையும்  வாய்மையும்  நம்மை இன்னும் நேரடியானதாகத் நம்மை  தட்டி எழுப்பும்  குரலாக நமக்குக் கேட்கிறது.  அன்று தெய்வத்தின் துணை கொண்டு தேசத்தைக் காப்பாற் வேண்டிய  லட்சிய  ஆவேசத்தால் உந்தப்பட்டு எஔந்த  இவன்  கவிதைகள் இன்று வாசிக்கும்போது ஒரு  கூட்டத்தை நோக்கி  உரக்கப் பாடும்  குரலாக  நமக்கு  ஒலிக்கின்றன.  அந்தக் கால  கட்டத்தில்  மக்க ளின்  சுரணை யற்ற  மந்தைத் தன்மையை  கோபமாக  சாடி  அவர்கள் தன்மானத்தை  மீட்டெ டுக்க  அப்படிப்பட்ட  குரல் அவருக்கு அவசியமாக  இருந்திருக்கிறது.  இதுவும் நம்மை ஒரு வசிய நிலைக்குத்  தான்  இழுத்த்ச் செல்லும்  சக்தி வாய்ந்த  பாடல்கள்.

  சுதந்திர வேட்கையில் எல்லோரையும் அக்கறை கொள்ள வைக்கும்  வசிய மருந்தாக  நம் தேசீய உணர்வைத்  தூண்டும் விதமாக  இருந்தது.பாரதியின் பாடல்களால்  கவரப்பட்ட காலத்தில்  எனக்கு அவருடைய  வசன் கவிதைகள்  அவ்வளவாகப் புரிந்ததில்லை. .  இந்த  மாறுபட்ட  வடிவத்தில்  ஏன் எழுதினா ரென்று  நான் யோசித்த்துண்டு.

 இந்த  வடிவத்தில்  அவர்  ஏன் எழுதினாரென்று  பலவித  ஹேஷ்யங்கள்  சொல்லப் படுகின்றன. எது எப்படி இருந்தாலும்  நான்  இந்தக் கவிதைகளில்  ஒரு வித  Introspective  நிலையைக் காணமுடிகிறது.

 தேசம்  தெய்வம் என்று  மீட்டிங் பாட்டுக்களையெல்லாம்  மறந்து  விட்டு தன்  அடிமன நிலைகளில் சுயேச்சையாக விடுதலையாக  சம்பாஷித்துக்கொள்ளும் கலைஞனைக் காண  முடிகிறது.  இரண்டு  கயிறுகளை  ஆண் பெண்ணாக்கி  தன்  inihibition களை  அதன்  மூலம்  வெளிப்படுத்தும்  ஒரு நுண்மையான  கவிப்பார்வையைக் காண முடிகிறது.  “ஊர்க்காற்றை மனிதன் பகைவனாக்கிக் கொள்ளுகிறான்”  என்று  ஒரு  இட்த்தில் அனாவசியமாக  சொல்லும்  ஒரு வரி  ஒரு  சக்தி வாய்ந்த  தீர்க்க தரிசனமான  பார்வையாக  இன்றைய  நூற்றாண்டின்  ஆதாரமான  சூழல் பிரச்னையை  அழுத்தமாக  கவிதையாக்குகிறது.  

 பாரதிதாஸனால்  கவரப்பட்டவர்கள்  ஏராளம். அவர்  கவிதைகளை  அமிழ்தாக்க் குடித்தவர்கள் நிறையப் பேர்கள்  உண்டு. துரதிருஷ்டவசமாக  எனக்கு  அவர்  கவிதைகள் அற்புத மான  நெகிழ்ச்சியையோ  பாரதி கவிதைகள் போன்ற  தரிசனத்தையோ  சத்தியத் துடிப்பையோ  கொடுக்கவில்லை. இது  ஏன் என்று யோசித்துப் பார்க்கிறேன்?

 பாரதியினுடைய   விரிந்த மானுட நேசமும்  தேசிய அரவணைப்பும் உலகப்பார்வையும் பாரதிதாஸனிடம்  பிராந்தீயப் பார்வையாக  சுயமொழிப் பார்வையாக  குறுகி  சிறுத்து விடுகிறது  பாரதியின் கண்களில்  உன்னத பிறவியாகத்  தெரியும்  மனிதன் பாரதிதாஸனிடம்  வரும்போது  தமிழன்  தான் உயர்ந்த மனிதன்  என்று  அர்த்தமில்லாத அரசியல் பிரசார முழக்கமாகி விடுகிறது.

 தன் மொழியைப் பற்றி அளவுக்கு  மீறிய அபத்தமான  பற்றை ஊதி வளர்த்து விடுவது  பன்மொழி பேசும்  கூட்டு மனித சமுதாயத்தை   துண்டித்து  வேலி கட்டி  வேற்றுமைகளை வளர்க்கிறது ?

   “சிந்து நதிக் கரையின் மிசையினிலே
    சேர  நன் நாட்டிளம் பெண்களுடனே
   சுந்தரத் தெலுங்கினில்  பாட்டிசைத்தே
தோணிகள்  ஓட்டி விளையாடி வருவோம்” 

என்ற  வரிகளில்  எவ்வளவு  பரந்து விரிந்த   மானிட நேயமும் கவித்துவப் பெருமிதமும்  தொனிக்கிறது?  

  இன்றைய கவிதைகளுக்கு  வரும்போது  இன்றைய  கவிஞர்கள்  மொழியை நுண்மையான  கவனத்துடன்  அதன்  பன்முகமான தொனிகளை  உணர்ந்து உபயோகிக் கிறார்கள்  மொழியைப் பற்றிய வெறிகலந்த  அபிமானமோ அனாவசி யமான  மரியாதையோ  இன்று நம் கவிதைகளில்  தெரிவதில்லை. கருத்துக்களின்  கூட்டு லயங்களால் மட்டுமே கவிதைக்கு  மொழி  ஒரு CATALYST  கண்ணுக்குத்  தெரி யாத  முதுகெலும்பாகத்  தான்  மஒழி நமக்கு பயன் படுகிறது.. பயன்பட வேண்டும்.

  இப்படியெல்லாம்  OBJECTIVE  ஆக  சொல்ல முயன்றாலும்   நாம்  கவிதை  எழுத்த் தூண்டப்படுவது  இப்படிப்பட்ட  OBJECTIVE  கோட்பாடுகளால் அல்ல  திட்டவட்ட மான  விமர்சன  நியாயங்களோடு  கவிதை  எழுத வேன்றுமென்று  நினைப்பது  ஆபத்தானது. அது  மறுபடியும்  ஒரு  வேண்டாத  செய்யுள் நிலைக்கே  கொண்டுவிடும்.
   
 இன்று நமக்கு  கருத்தைப் பற்றியும் வடிவத்தைப் பற்றியும் அளவில்லாத  சுதந்திரம் இருக்கிறது. போன  தலை முறைகளுக்கு கிடைக்காத ந்த  சுதந்திரம் தற்காலக் கவிஞர் களின்  சிருஷ்டித்  திறமைக்கு  உண்மையிலேயே  ஒரு சவால்  தான்.  உலகத் தின்  எந்த  மூலையிலிருந்தும்  பாதிப்புக் கொள்ளும் அளவுக்கு நமக்கு மன விஸ்தாரம்  தேவையாக  இருக்கிறது.

  கடந்த  இருபது  ஆண்டுகளாக   தமிழ் வசன கவிதைப் போராட்டங்களைப்  பார்க்கும் போது  எனக்கு வருத்தமாகவும்  வேடிக்கையாகவும் இருக்கிறது. இந்த  கலைப் பிரச்னைக்காக  எரிந்த  கட்சி  எரியாத  கட்சி என்று வரிந்து கட்டிக் கொண்டு ஒருவர்  நீ சரஸ்வதியை  மூளியாக்கினாய் என்பதும்  இன்னொருவர்  நீ கவிதையை விதவை  ஆக்கினாய் என்றும்  மாறி மாறி  வசன்க் கவிதைகள்  பாடியே ஏடுகள்  போர்ப் பரணி  எடுக்கின்றன. அதே சமயம்  சமகால ஐரோப்பியக் கவிதைகளுக்கு  ஈடான வலிமையுடன் நமக்கு சிறந்த  படைப்புகள்  கிடைக்கவில்லை.

இந்த  ஆரம்ப்ப் போர்க்கள மனப்பான்மை அவ்வப்போது மடிந்தும் மலர்ந்தும் பல திசைகளுக்கு  உருண்டோடியிருக்கின்றன.

 எழுத்துவோடு நான் சம்பந்தப்பட்ட போதும் அதற்குப் பின்பு சில  வருஷங்கள்  வரையிலும் கூட  எனக்கு  இந்த  பிரச்னை வட்டத்துக்குள்  தீவிரமாக  சிக்கிக் கொள்ளாமல்  என் வழியில்  கவிதைகள்  எழுதி வந்தேன்.

 அதில் என்னோடு சம்பந்தப்பட்ட  பல கவிஞர்களையும்  இந்தப் போராட்டம்  எந்த  அளவு க்கு  பொருட்படுத்த தகுந்ததாக  இருந்தது  என்ற அனுமானம்  எனக்கி ல்லை.  அப்படி பாதித்திருந் தாலும்  அது  மேலும்  ஆக்கபூர்வமாக  creative  ஆக  இந்த புதுக்கவிதைத் துறையில் செயல்பட  தூண்டியிருக்கிறது  என்பது  உறுதி யாகத்  தெரிகிறது, இந்த  விஷயத்தில்  சி.சு செல்லப்பாவின்  பிடிவாதமான  வீர்யம்  இந்த  புதுக் கவிதை  இயக்கத்தை  தூக்கி நிறுத்தி இருக்கிறது .

 எழுத்துவுக்குப் பின் கசடதபறவும்  நடையும் ந்னும் இக்கவிதைகளின்  வெவ்வேறு முகங்களைக் காட்டியிருக்கின்றன.  இன்னும் கணையாழி  சதங்கை நீலக் குயில்     அ-க்  இன்று  பிரக்ஞை என்று அநேக பத்திரிகைகள்  புதுக்கவிதை களை  வாரி வாரிக் கொடுத் திருக்கின்றன.

 இவைகளில் எந்தப் பத்திரிகை எந்த அளவில்  இந்த  துறையை  செழுமைப்படுத்தியிருக் கின்றன என் historical Criticism செய்யும்  Objective distanceல்  நான் இல்லை.  ஆனால்  இன்று  Distinct   inner  voice  of  the  POET   அழுத்த மாக  தெரிவதில்லை  என்று  நான்  உணர்கிறேன் ஒரு   கவிதையின்  முழுமைக்கு  கவிஞ னின்  ஆளுமை  முக்கியம்  என்று  நினைக்கிறேன்.

 என் கவிதைகளில்  என்  முகத்தை மறைக்க  என்னால்  முடிந்த்தில்லை  என் எழுத்து  கவிதைகளுக்கும்  உதய நிழல் கவிதைகளுக்கும்  அதன்  தொனியில்  மாற்றம் ஏற்பட்டிருப்பதை  பலர் சுட்டிக் காட்டியிருக் கிறார்கள்  இந்த  மாற்றத் திற்கு  அந்த  சமயத்தில்    தீவிரமான   ஓவியப் பயிற்சிகளும் கவிதையை  மறந்து  சற்றே ஓவியானுபவத்திலேயே திளைத்ததால் ஏற்பட்ட காட்சி பூர்வமான  பார்வை களும்  காரண மாக  இருக்கலாம்  இந்த  மாற்றங்கள்  கவிதையின் வளர்ச்சியா  வீழ்ச்சியா  என்று நான்  ஆய்ந்து  பார்க்க நினைத்த்தில்லை. இன்னும் எந்தப் புதிய  மாற்றங்களுக்கும்  என்னைத் திறந்து வைத்துக் கொள்வது  பயன்தரக்  கூடும்.

 சென்ற தலைமுறைகளுக்கில்லாத  கருத்து சுதந்திரம்  ந்மக்கு  எந்த சாதாரண மான   விஷயங்களையும்  கவிதையாக்கும்  விசாலமான  படைப்பு வெளியைத் தந்திருக் கிறது .

 நம்  கவிதைகளின்  அடையாளம்  உலகமுழுவதுக்கும் பொதுவான  அர்த்தமுள்ள  வெளிப் பாடாக  மாறிக் கொண்டு வருகிறது.

வறுமை  பீடித்த உலகின்  எந்த தெருக்களிலும்  நாம்  சப்பட்டையான  பிச்சைக்காரனைப் பார்க்க முடியும்  என்  மன  நிழல்  எந்த  மண்ணில் விழுந்தாலும்  அது  எனக்கு கார்ட்டூனாகத் தெரிய  சாத்தியமுண்டு.

 “சோறு  போட முடியாவிட்டாலும்  நாய்  உன்  கழிவை சாப்பிடுவதையாவது  அனு மதி”  என்கிற  உக்கிரமான  கவிதை  எந்த மொழியிலிருந் தாலும்  அர்த்தமுள்ளது  தான்.

 ஒரு  ஒரியாக் கவிதை  --ஆபீஸிலிருந்து  வீடு  திரும்பிய  அவனை வீட்டில் உள்ளவர்கள்  யாருமே கண்டு கொள்வதில்லை. அவன்  திடுக்கிடுகிறான்  அப்போது தான்  அவன்  உணருகிறான்  அவன் கைகளை  பஸ்ஸிலேயே  தொங்க விட்டு வந்திருக்கிறான்  அவன் கண்கள்  கண்ணாடிக் கூட்டுக்குள் இருக்கின்றன். அவன்  வாய்  ஆபீஸ் தொலைபேசியில்  ஒட்டிக்கொண்டிருக்கிறது  அவன்  கால்களை  நேற்று ஏதோ ஒரு க்யூவிலே  விட்டு விட்டு வந்திருந்தான். 

  இந்தக் கவிதை  ஒரியா மொழியிலிருந்தாலும்  உலகத்துக்கே  பொதுவான  மானிட  சோகம் 
  Bad Poetry   எல்லாக் காலத்திலும்  இருக்கத்தான்  செய்கிறது. ஆனால்  உண்மைக் கவிதைகள்  என்றும் செத்த்தில்லை.

 இன்று நாம்  எந்த  எதிபார்ப்புமின்றி  வெவ்வேறு  மனச்சூழல்களில்  வெவ்வேறு அறிவு சார்புகளில்  இருந்து நமக்கு நிகழும் அனுபவங்களை இலக்கியமாக  எதிரொலிக்கிறோம்.

 அடிப்படையாக  தன்னையும்  பிறரையும் துவேஷிக்காமல் மனித நேயத்துடன்  வாழ்வுப் பிரச்னைகளை  உள்வாங்கி  எழுதினால்  நாம் எழுதுவது முதலில்  நமக்கும்  பிறகு  உலகத்திற் கும் ஒளி காட்டும் என்று நம்புகிறேன்.







                          


No comments:

Post a Comment