vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Thursday, February 2, 2017

கோமல் சுவாமிநாதனும் நானும் - வைதீஸ்வரன்


கோமல் சுவாமிநாதனும் நானும்
வைதீஸ்வரன்

கோமல்  சுவாமிநாதனை  பல  வருஷங்களுக்கு  முன்னே இளம் வயதிலேயே சந்தித்து  விட்டேன்.

அவரைப்  போலவே பிற்காலத்தில்  முக்கியமானவர்களாக வளர்ந்த  பல  நல்லவர்களை  நான் ஆரம்ப காலத்திலேயே  சந்தித்திருக்கிறேன் . அது என்  முன் வினைப் பயன். என்று  சொல்ல வேண்டும்.

சுவாமிநாதனை நான் முதல்  முதலாக  1956ல் பார்த்தேன்.  அவர் அப்போது  தேசத் தொண்டில் நாட்டம்  கொண்டவராக  காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில்  பங்கேற்பவராக  முற்போக்குக் கொள்கைகளில் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டவராக இருந்த  இளைஞர்,  இலக்கியத்தின் மூலம் முக்கியமாக நாடகங்களின்  மூலம் அத்தகைய லட்சியங்களை சமூகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் பரப்பி பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமென்ற கனவுகள்  நிறைந்தவராக இருந்தவர்,  நிரந்தரமான  உத்யோகம் கிடைக்கக் கூடிய தகுதிகள் இருந்தும் அவைகளை  நிராகரித்து விட்டு சற்றும் உத்தரவாதமில்லாத எதிர்காலத்தை குடும்பக் கவலைகளையும் மீறி ஏற்றுக் கொண்டவர் அவர்.

அப்போது  மூத்த நாடகத் திரைக் கலைஞர்  திரு  எஸ். வி ஸஹஸ்ரநாமம் அவர்கள் மேற்பார்வையில்   நாடகக்  கல்வி  நிலையம் என்ற குறுகிய கால பயிற்சி திட்டம் ஒன்று ஆரம்பிக்கப் பட்டது.    நாடகத்  துறையில்  ஈடுபட  ஆர்வமுள்ள  இளைஞர்களை  அங்கே  மாணவர்களாக  ஏற்றுக் கொண்டு   நாடகக் கலை பற்றிய பல வகையான  அங்கங்களைப் பற்றிய  அடிப்படையான அறிமுகமும்  செயல் முறைபயிற்சியும்  மூன்று  மாத காலத்தில் அளிக்கத் தொடங்கப் பட்டது .

கோமல் சுவாமிநாதன்  அந்தக் கல்வி நிலையத்தில் தான்  ஒரு மாணவராக   வந்து  சேர்ந்தார். அப்போது  அவர்  வெறும் சுவாமிநாதன்  தான்.  அவர்  நாடகக் கதாசிரியராக  இயக்குனராக வளர வேண்டுமென்ற  விருப்பம்  கொண்டவராக  பயிற்சிக்கு வந்திருந்தார்.

இந்த  நாடகக் கல்வி நிலையத்தை  முன்னெடுத்து நடத்தும் இயக்குனராக பணியாற்றியவர் திரு. ராஜாமணி  அவர்கள்.  {அவர் எனது ஒன்று விட்ட சகோதரர்.  பெரியம்மா மகன்}

அப்போது கவிதை கலைகள் இவைகளில்  மிகவும் ஆர்வங்கொண்டவனாக  கல்லூரிப் படிப்பை முடித்திருந்த எனக்கு   அடிக்கடி  நாடகக் கல்வி நிலையத்து  மாணவர்களை  சந்தித்து அணுகிப் பேசுவதற்கு  சூழ்நிலையும் ஆர்வமும்  அமைந்திருந்தது.

அந்த  மாணவர்களில்  சுவாமிநாதன் எனக்கு மிகுந்த நெருக்கமானவராக  ஆனார்.. அப்போது அவர்  வசித்தது. மேற்கு மாம்பலத்தில்... ரயில் பாதையை ஒட்டி சின்ன நீர்த்தேக்கங்களை தாண்டி  விரிந்து கொண்டிருந்த  போஸ்டல் காலனி என்கிற அத்வானத்தில்!!

மாலை நேரங்களில்  ராயப் பேட்டையிலிருந்து  போஸ்டல் காலனிக்கு அவர் நடந்தே  தான்  போவார். வண்டிகள்  தாராளமாகப்  போகும் அளவிற்கு  அங்கே  சாலைகள்  இன்னும்  போட்டு முடியவில்லை.

அப்போது  நானும்  அவருடன்  நடந்து போவது  எனக்கு இனிமையான பொழுது  போக்காக  இருந்தது. அவர் பேச்செல்லாம்  நாடகங்கள்  பற்றியதாகத் தான்  இருக்கும். அவர் வாசித்து வந்த பல மேற்கத்திய நாடகங்களைப் பற்றியும்  அவைகளில் சமுதாயப் ;பிரச்னைகள் எவ்வளவு யதார்த்தமாக சொல்லப்படுகிறது  என்பது பற்றியும்  தமிழ் நாடகக் கலையின் போக்கை மாற்றியமைக்க வேண்டுமென்றும்   நிறையப் பேசிக் கொண்டே வருவார்.
நாடகக் கல்வி நிலையப் பயிற்சி  முடிந்த  பிறகு அவருக்கு தன்னை நாடக ஆசிரியராக நிலை நிறுத்திக் கொள்ள  வாய்ப்புகளுக்காக அவர்  காத்திருக்க வேண்டி இருந்தது. .. அப்போது  ஸேவாஸ்டேஜ் நாடக குழுவின் நீடித்த தொடர்பு  அவருக்கு  அவசியமான ஒரு ஊன்று கோலாக தேவைப் பட்டது.
அப்போது  சேவாஸ்டேஜ்  நாடகக் குழு  பிரபல எழுத்தாளர்களான பி.எஸ் ராமையா...தி. ஜானகிராமன்  கு. அழகிரிசாமி போன்றோரின் நாடகங்களை  ஓரளவு வெற்றிகரமாகவே  நடத்திக் கொண்டிருந்தன.  இந்த வரிசையில் முற்றிலும் புதிய  இளம் நாடக ஆசிரியரான  கோமல் சுவாமிநாதனுக்கு அங்கீகாரமும் வாய்ப்பும் கிடைப்பதற்கு அவர்  சில  வருஷங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.

இந்த இடைப் பட்ட வருஷங்களில் அவர்  ஸேவாஸ்டேஜ்  கணக்கு வழக்குகள்  நிர்வாகம் முதலியவற்றைக் கவனித்துக் கொள்ளும் காரியஸ்தராகப் அங்கே பணியில் இருந்தார். இது அவர் செய்து  கொண்ட  தற்காலிக  சமரசம்  தான்

அதன் பிறகு  அவருடைய நாடகங்கள்  “புதிய பாதை”  வாழ்வின்  வாசல் “ போன்றவை  ஸேவாஸ்டேஜ்  குழுவினரால்  நடிக்கப்  பட்டு  பரவாலாக  பேசப்பட்டன.  அவருடைய நாடகங்களின் மூலம் அவருக்கு சினிமாத் துறையிலும்  தொடர்ந்து உதவி வசனகர்த்தாவாக  வாய்ப்புகள்  நிறையவே வந்தன. இந்த வாய்ப்புகள் தான்  உண்மையிலேயே அவருக்கு குடும்ப வாழ்க்கையின்  வறுமையை ஓரளவு  சமாளிக்க  “கை கொடுத்த தெய்வமாக”  இருந்தன.

.  அவருடைய  நாடகம்  “தண்ணீர்...தண்ணீர்” மக்களின் வாழ்வாதரப் பிரச்னையை  அரசியல் விமர்சனத்தை அழுத்தமாக பிரதிபலித்த ஒரு நாடகம்.  அது மிகத் திறமையாக திரைப்படமாக  வந்து  அகில இந்திய பரிசு வாங்கித் தந்தது கோமலின்  நீண்ட கால கலை ஊழியத்துக்கு  அவருடைய  நாடக வரலாற்றில்  ஒரு வைரக்கல் என்று அதை  சொல்லலாம். அதேவகையில்  அரசியல் நையாண்டியாக நவாப் நாற்காலி...இந்தியக் கனவு போன்ற  படங்களும்  அவர் இயக்கத்தில்  வெளிவந்திருக்கின்றன      ..

.   நாடக ஆசிரியனுக்கும் நாடகத் தயாரிப்பாளருக்கும்  படைப்பு சுதந்திரம்  வேண்டும். என்று  மிகவும் ஆதங்கப் பட்டார், கோமல்.  பல தரப்பட்ட  மக்களின் இயல்பான  ரஸனைக்கும்  நாடகத் தயாரிப்பாளருக்கும்  இடையே  ஒரு விதமான தரகர்களாக இந்த  சபாக்கள் செயல்  படக் கூடாது  என்று மிகவும் தீவிரமாக  அபிப்ராயப்பட்டார்.

ஸேவாஸ்டேஜ் நாடக மன்றம் இயக்கத்திலிருந்து நின்ற போது கோமல் Stage Friends  என்றொரு  நாடக அமைப்பைத்  தொடங்கி அதே நடிகர்களைப் பயன்படுத்தி நிறைய  நாடகங்களை  எழுதித் தயாரித்து  மேடை ஏற்றினார்.,  அவருடைய  லட்சியப்படியே  இந்த  நாடகங்கள்  எளிமையாகத் தயாரிக்கப் பட்டன.  நேரடியாக பல ஊர்களுக்கு சென்று  சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டினால்  நாடகங்களை எளிய முறையில் நிகழ்த்தினார். அவருடைய நாடங்கள்  வறிய எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளை அழுத்தமாக  பிரதிபலித்தன, சமூக  ஏற்ற்த் தாழ்வுகளை தீண்டாமைக் கொடுமைகளை உரத்த குரலில் பேசின.

அவருடைய இத்தகைய  நாடகப்போக்குகள்  கம்யூனிஸ ஆதரவாளராக அவரை மாநில முற்போக்குக் கழகத்தின் தலைவர் பதவிக்குத்  தகுதியுள்ளவராக ஆக்கியது.

அவர் நாற்பதுக்கும் மேற்பட்ட  நாடகங்கள் எழுதி இருக்கிறார்.  தமிழ்நாட்டின்  பட்டி தொட்டிகளிலெல்லாம் மேடையேற்றியிருக்கிறார்.   . ஆனாலும்  அன்று இந்த நிகழ்வுகள் ஒரு குறிப்பிடத் தக்க முக்கியமான சமூக கலாசார  இயக்கமாக ஏன் ஊடகங்களில் பரவலாகப் பேசப்படவில்லை  என்று நினைக்கும் போது புதிராகவும் வருத்தமாகவும் இருக்கிறது.

கோமல் எழுதி  ஸேவாஸ்டேஜ்  தயாரித்த  “புதிய பாதை “ என்று ஒரு நாடகம். அநத  நாடகத்தில்  ஏழைகளின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு  அட்டுழியம் செய்யும் ஒரு நாட்டாமையின் பாத்திரம் வரும். அவருக்கு  ஒரு முற்போக்கு சிந்தனையுள்ள  ஏழைகளின் மேல் இரக்கங் கொண்டவனாக  ஒரு மகன்.  ஒரு காட்சியில் அப்பாவுக்கும் மகனுக்கும்  பலத்த வாக்கு வாதம் நடக்கும் மகனின் போக்கைக் கண்டித்து அப்பா  கோபமாக திட்டுவார். மகன்  அவருடைய போக்கைக் கண்டித்து எதிர்த்துப் பேசிக் கொண்டே இருப்பான் . ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு கோபம் எல்லை மீறி  மகனை  அறைந்து அடிக்கத் தொடங்கி விடுவார்.  அந்த  மகன் பாத்திரத்தில் தான்  நான்  நடித்தேன்.

இந்த நாடகம்  நிகழ்ந்த போதெல்லாம் பொதுவாக அந்த“” நாட்டாமை” “”நடிகர்  என்னை அடிப்பது  போலத் தான் நடித்துக் கொண்டிருந்தார். நானும் வலிப்பது போல  நடித்துக்  கொண்டிருந்தேன்  ஒரு தடவை அவருக்கு என் மேல் என்ன கோபமோ தெரியவில்லை நிஜமாகவே நாலு அடி போட்டு அறைந்து விட்டார். அன்று நான் நிஜமான வலியால் கத்தியது தத்ரூபமான  நடிப்பாக  இருந்ததாக ஜனங்கள்  அனுபவித்து ஆரவாரித்தார்கள்!! “புதிய  பாதை “ இன்னும் எனக்குள் நடுக்கத்தை  ஏற்படுத்துகிறது.

கோமல் சுவாமிநாதனின் வாழ்க்கைப் பணிகளில் வினோதமான புதிய திருப்பமாய்  நேர்ந்தது  அவர் “சுபமங்களா” என்கிற பத்திரிகைக்கு ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டது  தான்.

சுபமங்களாவை அவர் வடிவமைத்த நேர்த்தி .. அவரை  ஒரு  சிறந்த இலக்கிய பத்திரிகை ஆசிரியராக  ஒரு சிறப்பான  கௌரவத்தை அவர்  வாழ்க்கையின் அந்திம காலத்தில் ஏற்படுத்திக் கொடுத்தது. ஏற்கனவே வேறு தரத்தில் வெளிவந்து கொண்டிருந்த சுபமங்களா பத்திரிகை அவர் மேற்பார்வையில் ஒரு புதிய சமூக இலக்கிய அடையாளத்தைப் பெற்றது. பல  சீரிய எழுத்தாளர்கள் எழுதினார்கள். வளரும் பல இளைய எழுத்தாளர்களுக்கு அது சங்கப் பலகையாக  இருந்தது. கதைகளும் கட்டுரைகளும் விவாதங்களும் நேர்காணல்களும்  சீரிய வாசகக் கூட்டத்தை  உருவாக்கும் விதமாக  வெளி வந்தன.  அதற்குப் பின் வந்த பல இலக்கிய இதழ்களுக்கு சுபமங்களா ஒரு முன்மாதிரியாக  ஒரு உந்துதலாக  இருந்ததென்பதை  நாம் பார்க்க முடிகிறது. இந்த அதிசயம் நிகழ்ந்த ஐந்து ஆண்டுகளுக்குள் அவர்  நோய் உபாதையால் மறைந்து விட்டார்.

அவர் விட்டுச் சென்ற “சுபமங்களா” இதழ்களும்  அவருடைய அருமையான  மனைவி பிள்ளைகள்  பெண் சார்ந்த குடும்பம்   இவை தான் அவருடைய  பெருமையை  பல்லாண்டுகள் நீடிக்கச் செய்யும்.

சுபமங்களா” வின்  ஐந்து ஆண்டுப் பிரதிகளை  இணையத்தில் தரவிறக்கும் செய்து பார்க்கும் வசதியை குவிகம் இலக்கிய வாசல்  குழு இப்போது  செயலாக்கி இருக்கிறது.

அந்திம காலத்தில்  ஒரு பிரகாசமான சுடராய்  1995ல் கோமல் சுவாமிநாதன் தனது அறுபதாம் ஆண்டில் மறைந்த போது   சமூகத்தின் அரசியல் சினிமா  இலக்கியம் சார்ந்த பலதரப்பட்ட நண்பர்கள்  அவர் இழப்பினால்  வருந்தி  அஞ்சலி செலுத்தக் கூட்டமாகக் கூடினார்கள்.

  .                      அமுதசுரபி பிப் 2017

No comments:

Post a Comment