vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, February 10, 2017

யதார்த்தத்தை வெளிப்படுத்தும் திருப்பங்கள்
 அம்ஷன் குமார்
வைதீஸ்வரன் கதைகள் --–எஸ். வைதீஸ்வரன் .

கவிதா பப்ளிகேஷன் . 8, மாசிலாமணி தெரு . பாண்டி பஜார் , சென்னை 600 017.
 விலை ரூ 225 
பக்கங்கள். 304 
தொலைபேசி 2436 4243, 24322177.
சந்தி பிரித்து சொற்களை தெரிந்தெடுத்துக்கொள்ளவோ அருஞ்சொற்களுக்கு பதவுரை காணவோ அவசியம் ஏதுமின்றி புதுக்கவிதைகளை சுமாராகத் தமிழ் தெரிந்தவர்கள் கூட படித்துணரலாம்   என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் எழுபதுகளில் புதுக்கவிதை புரியவில்லை என்பதும் ஒரு குற்றச்சாட்டாக ஒரு சில மூலைகளில் ஒலித்தது . நவீன ஓவியமும் புரியவில்லை என்றும் அக்காலத்தில் அதிகமாக சொல்லப்பட்டது . புதுக்கவிஞர்கள் , நவீன ஓவியர்கள் ஆகியோரில் சிலர் புரிந்து கொள்ளப்படாமை என்பது மக்களின்  பிரச்னைகளேயன்றி தங்களுக்குள் அதில் ஈடுபாடு இல்லை என்று தெரிவித்தனர் . நான் என்ன கோனார் நோட்ஸா போடமுடியும் என்று கேட்ட கவிஞர்களும் உண்டு . அப்போது எஸ்.வைதீஸ்வரன் உதய நிழல் தொகுதியின் மூலம் அறிமுகமாயிருந்தார். அவரது கவிதைகள் படிக்கப்பட்டு விரிவாக பேசவும் பட்டன . அவர், ஞானக்கூத்தன் , தருமு அரூப் சிவராமு ஆகியோர் புதுக்கவிதையின் முக்கிய கவிஞர்களாக அறியப்பட்டனர். மூவருமே தங்கள் சிறந்த கவிதைகளை அநேகமாக எழுபதுகளிலேயே எழுதிவிட்டிருந்தனர் .
எஸ்.வைதீஸ்வரனை முதன் முதலாக 1974 இல் திருச்சியில் திருச்சி வாசகர் அரங்கு  நடத்திய  புதுக்கவிதை மாநாட்டில்தான் பார்த்தேன் . தான் எழுதிய கவிதைகளைப் பற்றி தானே பேசக்கூடாது என்று இறுக்கமாக இருந்த கவிஞர்களிடையேயிருந்து  அவர் மாறுபட்டிருந்தார் . கவிஞன் தன் கவிதை பற்றி பேசுவதன்மூலம் அதன் புரிதல் விஸ்தரிக்கப்படுமாயின் அது பற்றி பேசுவதில் தவறு ஒன்றுமில்லை என்று அவர் கூறியது எனக்கு ஞாபகத்திலிருக்கிறது.
அவரது கதைகள் அடங்கிய இத்தொகுப்பைப் படிக்கும்போது அன்று அவர் காட்டிய  அதே நிதானத்துடனும் எளிமையான சொற்சேர்க்கைகளுடனும் இவற்றை எழுதியிருப்பது தெரிகிறது .

இத்தொகுப்பில் முப்பத்தி நான்கு கதைகள் இடம் பெற்றுள்ளன . எந்தெந்த ஆண்டில் அவை வெளியாயின என்கிற குறிப்புகள் தரப்படவில்லை . சில கதைகளின் நடப்புலகம் காலத்தால் முற்பட்டவையாயும் ஆனால் கதை சொல்லுதல் நிகழ் காலத்தினதாயும் உள்ளன . வேறு சில நடக்கும் காலம் மட்டுமின்றி அவை சொல்லப்பட்ட காலமும் முற்பட்டதாக தோன்றுகின்றன.

`மூன்றாவது தந்தி` தந்தி பட்டுவாடா மூலம் அபாயகரமான செய்திகள் தெரிவிக்கப்பட்ட காலத்தியது. அக்கதை அது நடைபெறுகிற காலத்திலேயே எழுதப்பட்டது போன்றுள்ளது . பெரியவரின்  உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தந்தி தெரிவிக்கிறது .அவரது மகள் பதைபதைக்கிறாள்.ஆனால் அவளது கணவன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவள் தன் சிறுவயது மகனுடன் ஊருக்கு விரைகிறாள் . அங்கே பெரியவர் நல்ல உடல் நலத்துடன் காணப்படுகிறார் . அவளது சகோதரன் தேவைக்கதிகமாக பயந்து தந்தி அடித்திருக்கிறான் .இரண்டாம் முறை தந்தி வருகிறது . மீண்டும் மருமகனின் அதே சுபாவம் வெளிப்படுகிறது . ஊர்ப்பயணம் அதேபோல் நடக்கிறது . பெரியவருக்கும்  கவலைப்படும்படி ஒன்றும் இல்லை .  மூன்றாவது தந்தி வருகிறது . `இந்த முறை நமது அப்பா நிஜமாகவே செத்துப்போய்விட்டார் . ஏமாற்றவில்லை ` என்று அதில் கண்டிருக்கிறது . மரணம் அதிர்ச்சியைத் தருவதற்குப் பதில் சிரிப்பை வரவழைக்கிறது. `என் தாத்தாவும் இதைத்தான் விரும்பினாரோ` என்று கதை சொல்லியான சிறுவன் சொல்ல கதை இருண்மையான  நகைச்சுவையுடன் முடிகிறது.

`தவளையின் ரத்தம்` முற்றிலும் வேறுமாதிரியான கதை . இதுவும் நான் என்கிற கதைசொல்லியின் வாயிலாக சொல்லப்படுகிற கதை . கதைசொல்லியின் அத்தைக்கு நீண்டகாலம் குழந்தை பிறக்கவில்லை . ஒரு பெண் சித்தரின் மந்திர ஆலோசனைக்குப்பின்  அவளுக்கு கண்ணன் பிறக்கிறான் . அவளது கணவன் இறக்கவே கண்ணனே அவளது உலகம் என்றாகிறது . அவனுக்கு பதினெட்டு வயதாகும்போதே வம்சம் தழைக்கவேண்டும் என்ற அவசரத்துடன் பதினாலு வயதுப் பெண்ணை கல்யாணம் செய்து வைக்கிறான். பேத்தி பிறக்கிறாள் . கண்ணனுக்கு தீடிரென காய்ச்சல் . அலோபதி டாக்டரை முழுதாக நம்பாமல் அவள் அதே பெண் சித்தரின் உதவியை நாடுகிறாள் . அவள் தரும் சிகிச்சை எவ்வளவு விபரீதமானது என்பதை கடைசி நேரத்தில் அழைக்கப்படும் டாக்டர் வரும்போது தெரியவருகிறது . அந்த சிகிச்சை என்ன அதைப்பார்த்துவிட்டு டாக்டர் என்ன கூறினார்  அது கண்ணனின் தாயாரை எவ்வாறு பாதித்தது என்பனவற்றையெல்லாம் நான் சொன்னால் கதையின் சுவாரஸ்யம் கெட்டுவிடும் . இதுபோன்ற எதிர்பாராத திருப்பங்கள் அவரது கதைகளில் உண்டு . ஆனால் அவற்றை மெலோடிராமா உத்திகளாகக் கருதிவிடமுடியாது . சகமனிதர்களின் வாழ்வு நிகழ்வுகளை  திடுக்கிட்டு உணரவைக்கும் திருப்பங்களாகவே அவை அமைகின்றன. அவற்றினூடே ஒரு உள்ளார்ந்த அமைதியின்மையையும் நம்மால் உணரமுடிகிறது . `

எங்கிருந்தோ வந்தான்` கதையில் இரவு வேளையில்  ஆள் நடமாட்டமில்லாத ஒரு நெடுஞ்சாலையில்  ஒருவரின் ஸ்கூட்டர் பழுதடைந்து நின்றுவிடுகிறது . அவர் அவசரமாக பணிக்கு செல்லவேண்டும் . உதவ எவருமில்லை என்றிருக்கிற சமயத்தில் ஒரு மெக்கானிக் வழிப்போக்கன் தோன்றி ஸ்கூட்டரை சரிசெய்து கொடுத்துவிடுகிறான் . அவன் அதை பழுதுபார்க்கும்போது அவன்மீதே ஸ்கூட்டர் ஆசாமிக்கு சந்தேகம் . எங்கே மெக்கானிக் அதை அபகரித்து ஓட்டி சென்றுவிடுவானோ என்று . கதையின் திருப்பமாக அது இருக்கலாம் என்று நம்மை வைதீஸ்வரன் அனுமானிக்க வைக்கிறார் . ஆனால் அவன் நேர்மையானவன் . பின்னர் இரவுநேர ரோந்து போலீசாரால் சந்தேகத்தின்பேரில் பிடிக்கப்படுகிறான் . அப்பாவியான அவனைக் காப்பற்ற முடியாத வருத்தத்தில் ஸ்கூட்டர் ஆசாமி வருத்தத்தில் ஆழ்கிறார் . கதையின்  இத்திருப்பத்தில் மனிதாபிமானம் இழையோடுகிறது . `தவறான கோபம்` இந்த பாணியில் உள்ள மற்றுமொரு கதை . கதைத் திருப்பங்கள் நமக்கு வாழ்வின்  யதார்த்தங்களை உணர்த்துபவையாய் உள்ளன .அவை ஒன்றுக்குமேற்பட்ட அர்த்தங்களை சாத்தியமாக்குகின்றன .

உதாரணமாக சிருஷ்டி என்கிற கதை . இக்கதையில் பிள்ளையார் சதுர்த்தியன்று  அதுநாள்வரை களிமண்ணை விரல்களால் பிசைந்திராத ஒரு குடும்பஸ்தர் திடீரென  பிள்ளையார் பிடிக்க முயல்கிறார். பிள்ளையார் பிடிக்கவேண்டுமென்றால் முதலாவதாக பிள்ளையார் பற்றிய பிம்பம் மனதில் இருக்கவேண்டும் . காலண்டரில் உள்ள படத்தைப் பார்த்தும்கூட அவரால் வெற்றிபெற முடியவில்லை . முடிவாக ஏதோ ஒரு உருவத்தை கோணல் மாணலாக பிசைந்துவிட்டு அதுதான் பிள்ளையார் என்று தன் மகனிடம் மார் தட்டிக்கொள்கிறார் . மற்றவர்கள் வழிபடும்  களிமண் பிள்ளையார்களை  அவர் மார்க்கெட் பிள்ளையார்கள் என்று பரிகசிக்கிறார். .நைவேத்யம் தயாராகிவிட்டபடியால் படையலுக்கு எதோ பிள்ளையார் என்று ஒன்று கிடைத்தாலே போதும் என்று அவர் மகனும் அதை எடுத்துக்கொண்டு ஓடுகிறான். எவ்விதப் பயிற்சியுமின்றி அவர் ஆவேசத்துடன் உருவாக்கிய பிள்ளையார் என்னவாக இருக்கமுடியும் என்று எண்ணுகையில் நகையுணர்வு எழுகிறது. இதெல்லாம் சிருஷ்டியாக எண்ணத்தக்கதுதானா என்கிற கேள்வியை கதை எழுப்புவதுபோல் தெரிகிறது . மாற்றாக   நெருக்கடி ஏற்படுகையில் சராசரியான ஒரு மனிதன் உள்ளுணர்வால் உந்தப்பட்டு தனக்கேயான ஒரு பொருளை வடிவமைத்துக்கொள்ளும்  கணங்களை இக்கதை சித்தரிப்பதாயும் சிருஷ்டி என்பது எல்லோருக்கும் கைவரப்பெற்ற ஒரு செயல்தான்  என்பது  குறியீடாக இங்கு உணர்த்தப்படுவதாயும்  கொள்ளலாம்.

`ஊருக்குள் இரண்டு காளி` ஒரு எதிர்மறையான தொனியில் எழுதப்பட்டுள்ளது. இத்தொகுப்பின் குறிப்பிடத்தக்க கதைகளில் ஒன்று . 

பரோடா கலைக்கல்லூரி மாணவன் அம்ரிஷ் துர்கா பூஜையின்போது ஒரு காளி ஓவியத்தை தனது உள்ளுணர்வுகளின் தூண்டுதலால் வரைகிறான் . அது பாரம்பரியமாக காணப்படும் காளி அல்ல . அதை ஏற்காத அடிப்படைவாதிகள் ஓவிய சீலையை கிழிக்க முற்படுகிறார்கள். அவன் அறையில் சிற்பம் பயிலும் மாணவி ஸவிதாவை நிர்வாணமாக்கி ஓவியம் வரைவதைப் பார்த்தவுடன் அவர்கள் கோபம் கட்டுக்கடங்காமல் போகிறது . இருவரையும் அடித்து துரத்துகிறார்கள் . ஆனால் ஸவிதாவின் நிர்வாண சிற்பம் அதற்கான அங்கிகரிப்பினை தகுந்த இடத்தில் பெறுகிறது . சமகாலத்திய நிகழ்வு ஒன்றை அதன் அடிப்படை அரசியல் பின்புலத்துடன் பார்க்கிறது  இக்கதை . அதுபற்றிய விமர்சனம் தானாக கதை வாயிலாக எழுகிறது .

`மலைகள்` என்று ஒரு கதை . தினமும் அலுவலகத்திற்கு அருகிலுள்ள ட்ரங்க் ரோடிலுள்ள ஆலமரத்தின் நிழலில் இருந்து அந்த மலைகளைப் அடிக்கடி பார்க்கிறான் அவன்  . அவற்றின் மீதான விதவிதமான உணர்வுகள் அவன் மனதில் தீவிரமாக கூடிக்கொண்டே போகின்றன. ஒருநாள் மலைகள் அருகே செல்கிறான் .பரவசத்துடன் ஒலிகளை எழுப்புகிறான் . அப்போது அவன் எதிர்பாராது வேறு ஒலிகளைக் கேட்க நேரிடுகிறது . அந்த மலைகள் கற்களுக்காக சம்மட்டிகளால் பெயர்க்கப்படுகிற ஒலிகள் அவை . மலையை வியாபாரத்திற்காக சிதைக்கும் மனிதக் கூட்டத்தினரில் தானும் ஒருவன் என்று தன்னையே நிந்தித்துகொண்டு செல்வதாக கதை முடிவுறுகிறது. சுற்றுப்புற சூழலுக்காக இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைப்பதும் மனிதர்களின் ஜீவாதாரத்தை முன்னிறுத்தி செயல்படுகிற சுயநலம்தான். ஆனால்  கட்டற்ற இயற்கையை காரண காரியங்களின்றி மலைகள் கதாநாயகன் போன்று உள்வாங்கும்போது ஏற்படும் மனவெழுச்சிகள் உன்னதமானவை.

எஸ்.வைதீஸ்வரன் கதைகளை ஆர்.கே.நாராயண் கதைகளுடன் இணைத்து ஒப்பீட்டளவில் பார்ப்பதில் ஒரு பொருத்தம் தென்படுகிறது . ஆர் .கே .நாராயணைப்போலவே இவரும் பிரதானமாக கதைகள் சொல்கிறவர். .அவ்வாறு கதைகள் சொல்கிறபோது தத்துவ , அரசியல் , சமூக பார்வையுடன் உலகை படைப்பதில்லை . போதனைகள் ஏதும் அவற்றில் இருப்பதில்லை .அதேவேளை தீவிரமான கருத்தாக்கம் மிகுந்த பார்வையை முன்வைத்து  எழுதுபவர்களின்  படைப்புகள் எவற்றையெல்லாம் வெளிப்படுத்துகின்றனவோ அவற்றின் இழையோட்டங்களை  இவரது கதைகளிலும் காணமுடிகிறது .

வாழ்வின் பல்வேறு கூறுகளையும்  உணர்வு நிலைகளையும் இக்கதைகள் சுவாரஸ்யம் குறையாது  வெளிப்படுத்துகின்றன.
             ----------------------------------------

அம்ருதா  பிப்ரவர்  2017





Make yourself at home.


No comments:

Post a Comment