நினைப்பு
வைதீஸ்வரன்
திடீரென்று என் அறைக் கதவு திறந்தது, பார்த்ததும் ஒரு கணம் நான் வாயடைத்துப் போனேன். “அசோகமித்திரன் “.......நின்று கொண்டிருக்கி றார்!! என்னைப் பார்த்து சிரிக்கிறார்.
எனக்கு பேச்சு வரவில்லை. ஆனால் மனம் உரக்கக் கூவியது.
“ நீங்கள் இன்னும் சாகவில்லையா?..”
என் கேள்வி எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. வருத்தமாக இருந்தது.
நான் நினைப்பது அவருக்குக் கேட்டிருக்கிறது. அவர் பலமாக சிரித்தார். லேசாகத் தலையை ஆட்டினார்.
“ ஸாரி...நீங்கள் இறந்துவிட்டதாக நம்பி விட்டோம்..இரங்கல்கள் நட்த்தி விட்டோம்... ஸாரீ...”...”
அவர் மேலும் பலமாக சிரித்தபடியே என்னருகில் சற்று நெருங்கி வருகிறார். நான் அவர் கையைத் தொட முயன்றேன். கைகள் தெரிந்தாலும் அது என் ஸ்பரிசத்துக்கு நழுவிப் போனது.
ஆனால் அவருடைய மெல்லிய கம்பிக் குரல் காதில் கேட்டது..
“வைதீஸ்.... நாம் யாருமே எப்போதுமே செத்துப்போறதில்லே! நம் நினைப்புகளை அழிக்க முடியாது.. ஒருவேளை அவ்வபோது மறந்து போய் விடலாம். ஆனால் அழிக்க முடியாது.. நாமெல்லாம் யாரு? நம்மைப் பற்றிய நினைப்புகள் தானே!..” என்று முகத்தை யோசனையுடன் நீட்டிக் கொண்டார்...பிறகு வலது கையை உயர்த்தி நெகிழ்ச்சியுடன் பார்த்தார். பின் மறைந்து போய் விட்டார்.
உட்கார்ந்துகொண்டே தூங்கிக் கொண்டிருந்த நான் விழித்துக் கொண்டேன்.
எனக்கும் அது சரியென்று தான் தோன்றுகிறது. இதைப் பற்றி விவாதம் செய்யலாம். ஆனாலும். என் பாட்டி தாத்தா நினைத்த தெல்லாம் எனக்குள் திரும்புவதை நான் உணர முடிகிறது!!
..
No comments:
Post a Comment