vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Tuesday, August 2, 2016

கவிதை பற்றித் திரும்பிய நினைவுகள்

கவிதை  பற்றித்  திரும்பிய  நினைவுகள்

வைதீஸ்வரன்






 திரு.சி.சு.  செல்லப்பாவின்  பரிச்சயமும்  எழுத்து  பத்திரிகை  
பற்றிய  அறிமுகமும்  எனக்கு  1960களில்  கிடைத்தது. 

ஆனால்  எழுத்து பத்திரி கையின் புதுக்கவிதை முயற்சிகளை 
அறி வதற்கு  முன்பே நான்  “கிணற் றில் விழுந்த நிலவு“  
கவிதையை  எழுதி  வைத்திருந்தேன்.

இந்தக் கவிதையைக் கொண்டுபோய் அவரிடம் நான் 
கொடுத்தபோது  ‘எழுத்து’ இந்த  மாதிரி  தளை மீறிய  கவிதை
களைத்  தான்  வரவேற்கிறது என்று  எனக்குத்  தெரியாது!!  

இது  நான்  ஏற்கனவே  தெரிவித்திருக்கும்  தகவல்.

அது அப்போது  எழுத்துவுக்கு  ஏற்ற  புதுக்கவிதையின்  
பொருத்தமான அடையாளமாக  ஏற்றுக் கொள்ளப்பட்டது.!

 நான்  இந்தக் கவிதையை ஏன் அப்படிப்பட்ட பேச்சுத் தொனியில் இலக்கணத்தைப்பற்றிய  அக்கறையில்லாத  வடிவத்தில்  எழுதினேன்? எனக்கு  அப்போது  தெளிவாகத்தெரியவில்லை
எனக்கு.  

இப்படி  கவிதை மரபுகளை  உடைத்து  புதுக் கவிதை எழுத 
வேண்டுமென்ற கோட்பாடுகளும் அறியாதவனாக இருந்தேன்.!!!
  
ஒருவேளை அப்போது  நிலவரத்தில் இருந்த  ‘வெறுமையான 
கவிதைப்  பந்தல்கள் என்னையும் கோபப்படுத்திஇருக்கலாம்.

செல்லப்பா சொல்வது போல்  Stock    expressions    standard   descriptions… ஐம்பதுகளுக்கு  பிறகு  எந்தப் பத்திரிகையைத் திருப்பினாலும் “பாரதமாதா   காந்தி  தாய்நாடு  தமிழ்ப்பற்று  
இயற்கை  பற்றிய  கும்மிகள்.  இப்படித்தான்  கவிதைகள் 
இருக்கும்.  

சமயம்  கடவுள்  தோத்திரம்  இப்படிப்பட்ட  கவிதைகள்  மெது
வாகக் குறைந்துபோய்விட்டன.  

ஆனால்எல்லாமே தேசலாக  ‘செல்லப்பா  சொன்னதுபோல் 
’கம்பாஸிடர் கவிதை’களாக  இருக்கும்.

கலைப் பிரக்ஞையும் நுண்ணுணர்வும் கொண்ட பல இளைஞர் 
களை   வாழ்க்கையின்  சம கால தரிசனங்களை  புதிதாக  
படைப்பில் வெளிப்படுத்த வேண்டுமென்ற  ஏக்கமும்  கோப
மும்  விடுதலை வேகமும் ஆக்கபூர்வமாக அப்போது   எழுதத் தூண்டியிருக்க வேண்டும்.

கவிப் பொருளுடன்  தீவிரமாகத் தோய்ந்த  பிரக்ஞை  எந்த  
வடிவத்தை எந்த  மொழியை இயல்பாக  தேர்ந்து கொள்ளு
கிறதோ அந்த  வடிவமும்  மொழியும்   தான்  கவிதை  என்ற  உள்ளுணர்வு  எனக்கும்  நேர்ந்திருக்க வேண்டும் . 

செல்லப்பா  பிரகடனப்படுத்திய  புதுக்கவிதை  இந்தத்  தத்து
வத்தை அடிப்படையாக  கொண்டதோ!  

 நான்  அன்று  புதுக்கவிதைகளைப்  பற்றி  தீர்க்கமாகத்தெரிந்து
கொள்ள  வெவ்வேறு  திசைகளில் 'திக்குத் தெரியாமல்'  
சிந்திக்கத் தூண்டப்பட்டேன். 

 மொழிகளற்ற இயற்கையின்  ஓசைகள் என்னை வெகுவாக
 பாதிக்கும் அன்றாடப் பேச்சுவழக்கில்தொனிக்கும் 
அழகியலை நான் ரஸிப்பேன். 

கதாகாலட்சேபங்களில் பாட்டுக்கும்உரைநடைக்கும் தாவித்
தாவி மாறுகின்ற  உபந்யாசகரின்  லாகவங்கள்  
எனக்கு வியப்பாக  உற்சாகமூட்டுவதாக  இருக்கும் .

வார்த்தைகளின்அழுத்தங்களை மாற்றி மாற்றி அர்த்தத்தை 
வெவ்வேறு உணர்வு  நிலைகளுக்கு கொண்டுபோகின்ற  
நாடகவசனங்கள்...  

எதிர்எதிரான இரண்டு கருத்துக்களை மோதவிடும்போது 
திடீரென்று தெறிக்கிற மூன்றாவது அர்த்தம்…

இப்படி எதைஎதையோ மனத்துக்குள் போட்டுக் குலுக்கிக்  கொண்டிருந்தேன்.

ஆங்கில நவீன கவிதைகளில் ஒரு விஷயத்தை மிக வித்யாச
மாக புதிய யதார்த்தத்துடன் சொல்லும் பாங்கு என்னை 
யோசிக்கவைக்கும். 

இதைத் தவிர வார்த்தைகளின் இடைமௌனங்கள் எவ்விதம் 
ஒரு இன்றியமையாத கனத்தை பொருளுக்கு கொடுக்கிறது 
என்பதையும்  என்னால்  ஊகித்துணர  முடிந்தது. 

மேலும் நமது நாட்டுப்பாடல்களில் ததும்பி நிற்கும் எளிமை
யான நிஜமான வாழ்வின் ஓசைகள்என்னைக் கிறங்கடிக்கும் 
எல்லாமே ஒரு ஸ்வாரஸ்யமான  விளையாட்டாக இருந்தது 
எனக்கு.

இந்தப் பின்புலத்தில் எழுதிய கவிதைகள் வழக்கமான 
இலக்கணவிதிகளை  சாராமல் இருந்தாலும் கவிப்பொருள் 
சேதமடையாமல் கவிஅனுபவத்தைக் கொடுத்தது. 

மேலும்  வாழ்க்கையின்  நிகழ்வுகளை ஒரு சீரிய  விடுதலை
யான உணர்வுநிலையில் ஒன்றிப் பார்க்கும்  தருணங்களை  
நினைவுகள் குறுக்கிடாமல்  வெளிப்பட்டால் அது தானாகவே  கவிதையாகக்கூடும் என்றும்  எனக்கு அனுபவபூர்வமாக  
தெரிந்தது.

 இதற்கும் அடிப்படையாக  ஒரு  கவிதையின்  தகுதிக்கு  
வாழ்வின் நேசமும்  உயிர்களைஅரவணைக்கும்  பான்மையும் 
 பிரபஞ்ச  ஒருமையின் பிரக்ஞையும்தான்  முக்கியமான 
அடித் தளமாக  இருக்க வேண்டும். 
         .


Saturday, July 30, 2016

தினமணி புத்தக மதிப்புரை: வைத்தீஸ்வரன் கதைகள்.......... 25 July 2016



வைதீஸ்வரன் கதைகள்
- எஸ்.வைதீஸ்வரன்;
 
தினமணி புத்தக மதிப்புரை: வைத்தீஸ்வரன் கதைகள்..........
25 July 2016 
பக்.304; ரூ. 225;  
கவிதா பப்ளிகேஷன்,  
                           சென்னை17, 
044- 2436 4243.                                              
தமிழில் புதுக்கவிதையின் மறுமலர்ச்சிக் காலத்தில் கவனிக்கத்தக்க கவிஞராக அறிமுகமானவர் எஸ். வைதீஸ்வரன். பிறகு சிறுகதைகளையும் எழுதத் தொடங்கினார். அவர் சிறந்த நவீன ஓவியரும்கூட.
அந்த வகையில் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் பலவும் ஒரு கவிஞனின், ஓர் ஓவியனின் மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளன.
"பிம்பம்' என்ற கதை ஒரு மூதாட்டியைப் பற்றியது. "கதையாக' அது தொடங்கினாலும், முடியும்போது அதற்கு ஒரு கவித்துவம் வந்துவிடுகிறது. அந்தக் கவித்துவ அம்சம்தான் நம் நெஞ்சைத் தொட்டு நிற்கிறது.
இவரது எழுத்து பாணி என்பது சம்பவங்களின் அடுக்குகள் என நின்றுவிடுவதில்லை. "கனவில் கனவு' சர்ரியலிச வகையைச் சேர்ந்தது. கிராமப்புறத்தில் இளமைக்கால அனுபவங்களும் இவருடைய கதைகளுக்கு முக்கியப் பின்புலம்.
"மோதிர விரல்' அசாதாரணமான வாழ்க்கைப் பார்வையை சுலபமாகச் சொல்லிவிட்டுப் போகிறது.
வைதீஸ்வரன் கதைகள் என்ற பெயர் கொண்டிருந்தாலும் இது அவருடைய சிறுகதைகளின் முழுத் தொகுப்பு அல்ல. 1960-களிலிருந்து தற்போது வரையிலான 34 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இந்தப் புத்தகம்.
கவிதைகள் - அதிலும் புதுக்கவிதைகள் - கவிஞனின் ஆழ்மனதைச் சுருங்கச் சொல்வன. ஓவியமும் ஒரு கட்டத்துக்குள் ஓவியனின் மன உலகை அடக்க முயற்சிக்கிறது.
இந்த இரண்டு அம்சங்களையும் கவிஞரும் ஓவியருமான வைதீஸ்வரனின் கதைகளில் காணலாம்.


Sunday, July 24, 2016

ஒரு புகைப் படத்தின் கதை

ஒரு புகைப்படத்தின் கதை
 

வைதீஸ்வரன்


இந்த  புகைப் படம்  எடுத்த போது  எனக்கு  ஐந்து வயது 
இருக்கலாம். சேலத்தில்  என்  அப்பாவின்  நண்பர்ஒருவர் 
திடீரென்று  ஒருபோட்டோ ஸ்டுடியோவை ஆரம்பித்து
விட்டார்.

அப்போது அந்தத் தொழில் மிக  வித்யாசமானது.  நூதன மானது.  ஆனால்  அவர்  தொழிலில்  மிக ஊக்கமானவர். 
தன்  நண்பர்களையெல்லாம்  அழைத்து வந்து  போட்டோ எடுத்துக்கொள்ளும்  ஆர்வத்தைத்  
தூண்டிவிட்டார்.

 அநேகமாக  நான்  பிறந்த பிறகு  எடுத்துக்கொண்ட 
முதல் போ ட்டோ  இதுவாகத் தான் இருக்கும்.  அதற்கு முந்தைய  வருஷங்களில்  போட்டோ  எடுப்பதை என் 
பாட்டி  பிடிவாதமாகத்  தடுத்துநிறுத்திவிட்டாள். 
போட்டோ எடுத்தால்  ஆயுசு குறைந்து  விடும்” என்பது  அவளுடைய  அபிப்ராயம்.

இப்போதெல்லாம் வயிற்றுக்குள்ளிருந்தே குழந்தையை போட்டோ எடுக்க  ஆரம்பித்து  விடுகிறார்கள் !! 

இந்த போட்டோவில் என்கூட  நிற்கும் அக்கா  எனக்கு 
இர ண்டு வயது மூத்தவள்.  சாயங்காலங்களில்  திண்ணை
யில்  கல்லாட்டமும் பாண்டியும்  மற்ற  சிறுமிகளோடு 
விளையாடிக் கொண்டிருப்பதைத் தடுத்து  என் அம்மா  அவளை  இப்படி  இழுத்து வந்து  விசேஷமாக  அலங் 
கரித்து  போட்டோவுக்குத்  தயார் செய்ததில்  அவளுக்கு ரொம்பக் கோபமும்  அழுகையும்  வந்திருக்கவேண்டும்.

 “போட்டோவில்  சிரிக்காமல் இருந்தாலும் பரவா
யில்லை  அழுகாம  இரு..”  என்று என் அப்பா  அதட்டி 
இருக்க வேண்டும். 

தவிர  எங்களுக்கு எதிரே பளீரென்று விளக்குப் போட்டு  கருப்புத் துணிக்குள்  தலையை  நுழைத்துக் கொண்டு 
நிற்கும்  அந்த காமிரா  மாமாவைப் பார்க்கும் போது  
ஏதோ மந்திரவாதியைப் பார்ப்பது  போல்  இருந் திருக்க
லாம்.

 எனக்கு  அந்த  மூன்று சக்கர  சைக்கிள்   மிகவும் 
பிடிக்கும். அப்போது  அப்பா  சேலத்தில்  சைக்கிள்  
கடை  வைத்திருந்தார்.  அவர் கடைக்கு  இந்த  சைக்கிள்  
பழுதுபார்ப்பதற்கு  வந்திருந்தது.  அதை நான்  சில 
நாட்கள் ஓட்டிக் கொண்டிருந்தேன்.

 சைக்கிளை  ஓட்டவிடாமல்  அந்த  காமிரா  முன்னால் 
அசையாமல்  உட்காரச் சொன்னது   எனக்கு பிடிக்க வில்லை. அப்பாவின் கண்டிப்புக்காக  அசையாமல் உட்கார்ந்திருக்கிறேன்.

இந்தப் புகைப்படம்  சுமார்  75 ஆண்டுகளுக்கு  முன் எடுத்தாலும்  அதை எடுத்தவரின்  தொழில் நேர்த்தியை 
நிச்சயம் பாராட்ட வேண்டும்  .அப்போதைய  காமிராவில் 
மிகக் குறைவான  நுணுக்கங்களே இருந்தன.. இதை இயக்குவதற்கு  தீவிரமான  மனப் பயிற்சி வேண்டும்  

லென்ஸை  சரியான நேர அளவுக்கு  சில வினாடிகளுக்கு கையால் திறந்து மூட வேண்டும்   இந்தக்  கைத்திறமை 
ஒரு தியான நிலைக்கு  சமமானது.

எண்பது  வருஷங்களுக்கு  பிறகு  நம்மையே   நாம் 
திரும்பிப் பார்த்துக்  கொள்ளும்போது  நமது  வாழ்வின் ஆச்சரியமான  பரிணாமமும்  புதிரும்  வளர்ச்சியின் 
அரூபமான  ஒழுங்கும்   தீராத  நெகிழ்ச்சியைக் 
கொடுக் கின்றன.  ஏதோ  ஒரு  மகாசக்தியின்  விசால
மான கருணையை நினைக்கத்  தூண்டுகிறது