vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, March 17, 2013



                       சிறுகதை
ஒரு வேளை
வைதீஸ்வரன்


ஒன்பது நாற்பத்துஒண்ணுக்கு ஸ்டேஷனுக்கு ரயில்வரும் என்று அட்டவணை    தெரிவித்தது. ரயில் சரியாகவே வந்துவிடும். அவன் தான் அன்று சற்றுமுன்ன         தாக ஸ்டேஷனுக்கு வந்துவிட்டான். 

சிட்னிக்கு வந்தபிறகு தொழிலுக்குப் போய்வருவதற்கான போக்குவரத்து பிரச்னை     எதுவுமே கவலைப்படும்படியாக இல்லை.இங்கே வந்தவுடன் யாரும்  உடனடியாக உணர்வது  இந்த நிம்மதியைத்தான். ரயில்நிலை யங்களில் அதிகமானகூட்டமோ தள்ளுமுள்ளோ இருப்பதில்லை. குப்பை கூளங்களை அறவே பார்க்கமுடியாது.       வேலை இல்லாத பொறுப்பற்ற ஒருவன் கூட துண்டுசிகரட்டையோ காலியான           உணவுப் பொட்டலங்களையோ தரையில் எறிய மாட்டான். குப்பைப்பெட்டியைத் தேடிப்போய் போடுவது அவன் உடம்போடு ஒட்டிய பழக்கமாகிவிட்டது.

குளிர்காலம் தொடங்கிவிட்டது. ப்ளாட்பாரத்தில் உலாத்திக்கொண்டிருந்த  எல்லோ       ரும் அநேகமாக குளிரை எதிர்நோக்கி எச்சரிக்கையுடன் தங்களைப் போர்த்திக்கொள்     ளத் தொடங்கி விட்டார்கள். கதகதப்பான உள்ளாடைக்கு மேல் கம்பளிக்கோட்டு.. 

யாரும் யார் முகத்தையும் பார்க்கும்அக்கறையோ ஆர்வமோ தேவையற்று அவரவர் கைப்பேசிகளோடு சல்லாபித்துக்கொண்டிருக்கிறார்கள். வெள்ளைவெளேரென்று     மொழுக்குத் தோலுடன்ஒரு லெபனீஸ்  பிரஜை.... தாரில் முக்கியெடுத்தது போன்ற முகத்திற்குமேல்  ஸ்ப்ரிங் சுருள் முடியுடன் ஒரு நைஜீரிய வாலிபன்.ஏதோ ஒரு    சோகமும் ஊமை வேதனையும் படர விரக்தியான பார்வையுடன் நடந்துபோகும் இலங்கைத்தமிழன்... அயராமல் படித்து சேகரித்துக்கொண்ட அறிவியல்தகுதியை தங்கக்கட்டிகளாக மாற்றிக் கொள்ளும்அவசரத்துடன் பரபரப்பாகப் போய்க்கொண் டிருக்    கும் இந்திய இளைஞன் கரும்புள்ளி செம்புள்ளியுடனான தோலுடன் தொளதொளத்து ஆடியபடி அதே வயதுள்ள முது மனைவியைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு நகரும் வெள்ளைக்கார ஜோடிகள்.. இப்படி பிளாட்பாரம்முழுதும் கலந்துகட்டியான கலாசாரங்களின் மாதிரிகள்...  

இங்கே எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர்குலம் என்று உரத்துப் பாடும் நம்மூர்     கலாச் சாரம்  அர்த்தமற்றதாகத்தோன்றும். ஓரினமற்ற பல நாட்டுக்காரர்களும் இங்கே வந்து இந்நாட்டுப் பிரஜைகளாகி  சமமான உரிமையும் பாதுகாப்பும் தொழில் வாய்ப்பும் வசதி களும் பெற்று ஓரினமற்று  சகஜமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்... ஆனாலும், அவர் களுக்கிடையே ஆழ்ந்த நட்புறவு  இருப்பதாக முடிவுக்கு வந்துவிடமுடியாது. அவர்களுக்கு  இடையே பகை இல்லாதது போல்தான் இருக்கும் ஒருவருக்கு    ஒருவர் உரசிக்கொள்ளாமல்     தொழில் செய்துவிட்டு அவரவர் குடும்ப வட்டங்களுக்குள் பாதுகாப்பான அமைதியுடன் வாழ்ந்துகொண் டிருப்பதுதான் இங்கே வாழ்க்கை எனப் படுகிறது.   

ராகவன் இந்த ஊருக்குப் புலம்பெயர்ந்து இரண்டுமூன்று ஆண்டுகளுக்குமேல் ஆகி   விட்டது. ஆரம்பத்தில் அவனுக்கும் தாய்நாட்டைப் பற்றிய  பாச நினைவுகள் அடிக்கடி ஏக்கம்  பொங் கிப் பொங்கிஅடங்கிக் கொண்டிருந்தன.மொழியும் நிறமும் வேறுபட்ட   இந்த ஊரில் பிரச்னை யில்லாமல் வாழ்க்கை  நடத்தமுடியுமா என்று பயமாக தயக்க   மாக இருந்தது. ஆனால் பயந்ததுபோல் மோசம் இல்லை என்று இப்போது நினைத்துக் கொள்ள ஆரம்பித்தான்.  

ஆனாலும் இங்கே வந்து இரண்டுமூன்று வருடங்களுக்கு பிறகும்கூட அவனுடைய    சமூக சந்திப்புகளும் விழாக் கொண்டாட்டங்களும் அவன் மொழி; ஊர்சார்ந்த வட்டத் துக்குள் ளேயே தான் இருக்கிறது. .ஏன் இப்படி? உள்நாட்டு ஆங்கிலேயர்களுடன் உதட்ட ளவுக்கு மேல் பரிச்சயம் தாண்டவில்லை.அவர்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்று தோன்றி யது. அதிகம் நெருங்க அவர்களும் சம்மதிப்பதில்லையோ என்றுதான் ஊகிக்க வேண்டி இருந்தது. 

ரயில்வருவதற்கு பத்துநிமிடம்முன்பாகவே  அவன் வந்திருந்தான். ப்ளாட்பாரத்தில்          இடது பக்கத்தில்  நிறைய நீளமான பெஞ்சுகள் போடப்பட்டிருந் தன.ராகவன்போய் உட்கார்ந்த பெஞ்சில் ஒரு வயதான வெள்ளைக்கார மூதாட்டி அமர்ந்து கம்பளி பின்னிக்கொண்டிருந் தாள்.  இவன்  உட்கார்ந்ததை உணர்ந்தவளாக சற்று  நகர்ந்து உட்கார்ந்துகொண்டு தன் கைவேலையைத் தொடர்ந்தாள்.

அவன் எதிரே  கடந்துபோகும் கால்களைப்பார்த்தவாறு அமர்ந்திருந்தான். ரயில் வர இன்னும் இரண்டு மூன்று நிமிடங்கள் இருந்தன.அவன் கண் கள் திடீரென்று பரபரத்தது. எதிரே நடந்துபோய்க்கொண்டிருந்த  வெள்ளை க்கார இளைஞனின் பின்பாக்கட்டிலிருந்து  அவனுடைய ஐ-  போன் ப்ளாட்பாரத்தில் சத்தமில்லாமல் கீழே விழுந்தது.பாக்கட்டிலி  ருந்து  ஒரு காகிதத்தை எடுக்க முயன்றபோது அது நேர்ந்திருக்கவேண்டும். இளைஞன் அதை உணராமல் மெதுவாக நடந்துபோய்க்கொண்டிருந்தான்..

அருகில் உட்கார்ந்துகொண்டிருந்த கிழவியும் அதை கவனித்துவிட்டாள். இன்னும்    இரண்டு மூன்றுபேர்களும்அது விழுந்து தரையில் கிடப்பதைப் பார்த்தார்கள்.அவர்களும் வெள்ளைக்காரர்கள். ரயில் வருவதற்கு இரண்டு  நிமிடங்களுக்கும்குறைவான இந்த சமயத்தில் அவர்கள்  அக்கறை எடுத்துக்கொள்ளுவதா என்று குழம்பிநின்றார்கள். ராகவனுக்கு சும்மா உட்கார்ந்திருக்க முடியவில்லை.ஒரு விலைமதிப்புள்ள பொருளைத் தொலைத்து விட்டுஅந்த வெள்ளைக்காரப் பையன் கவனிக்காமல்  தூரமாகப்  போய்க் கொண்டே இருந்தான்.. ராகவன் பரபரப்புடன்  எழுந்தான். எழுந்ததும் அவன்  என்ன      செய்யப் போகிறானென்று கிழவியும் மற்றவர்களும் உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருந் தார்கள். 

வேகமாகப்போய் போனை எடுத்தான். மற்றவர்கள் சந்தேகத்துடன்அவனுடைய அடுத்த நடவடிக்கையை பார்த்துக்கொண்டிருந்தார்கள். எடுத்துக்கொண்டு ஓடிப்போய்விடு     வானோ என்றசந்தேகம் அவர்களுக்குள் வலுத்துக் கொண்டிருந்தது. அவன் ஐ-போனை எடுத்துக் கொண்டுஅந்த இளைஞன்  சென்ற திசையைநோக்கி விரைவாகப் போனான். ஆனால் இளைஞன் இப்போது இன்னும் வேகமாகப் போய்க்கொண்டிருந்தான். மற்றவர்   கள் அவனை மேலும் உன்னிப்பாகப்  பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தார்கள்.

அதற்குள் ரயில் வந்துவிட்டது. கும்பல் திரண்டது. ராகவனுக்கு அந்தப்பையனை     உடனே  கண்டுபிடிக்கமுடியவில்லை. எங்கே மறைந்து போயிருப்பான்?  ரயில் நகருவ தற்குள் அவனைப் பார்த்துக் கொடுத்துவிட முடியுமா?....அவன் காணாமல் போய்விட்  டால் என்ன செய்வது?

மேலும் தாமதித்தால் ரயில் நகர்ந்துவிடும்.ரயிலையும் தவறிவிட்டால் தொழிலுக்கு நேரத்தில்போகமுடியாது..சங்கடத்தில் அவன் அருகிலிருந்த பெட்டியில்ஏறிக்கொண்டு வெளியே நகரும் ஜனங்களில் அந்தப் பையனின் முகத்தைத் தேடிக்கொண்டிருந்தான். ...

ஹலோ..ஹலோ....என்று கூப்பிட்டவாறு அந்தப் பையன் நின்றுகொண்டிருந்த பக்கம் நகர்ந்து அவனருகில்  சென்றான்.

ஹலோ  இந்த  ஐ..போன்.உன்னுடையது..ப்ளாட்பாரத்தில் தவறவிட்டுவிட்டாய்...       செக் பண்ணிப் பாரு...இது உன்னுடையது தானே!.” [ஆங்கிலத்தில் சொன்னான்]

முதலில் புரிந்துகொள்ளாதஅந்தப் பையன் போனைப்பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்து பின்பாக்கட்டை தொட்டுப்பார்த்தான்.”Oh  My  God ! ..” 

தவறிப்போனபோன் மீண்டும் கிடைத்ததை உணர்ந்தபோது அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. முகம் சற்று சிவந்தது. பொங்கிவந்த பதட்டத்தை அடக்கிக்கொண்டு ராகவனின் கைகளைப் பிடித்துக்கொண்டான். நன்றி ததும்ப ”Thank  you.. Thank  you…”        என்று பலமுறை தழுதழுத்தான்.

ராகவனுக்கு நிம்மதியாகஇருந்தது.சந்தோஷமாகவும்இருந்தது.ஐபோனை தொலைத்த வனை நல்லவேளை தொலைத்து விடாமலிருந்தோமே! அவன்  முகத்தைத் துடைத்துக் கொண்டு உட்கார  இடம் தேடிக்கொண்டு நகர்ந்தபோது சற்றுமுன்பு  அவனை பிளாட் பாரத்தில்  பார்த்துக்கொண்டிருந்த வெள்ளைக்காரர்களில்  ஒருவன் அதே பெட்டியில்  ஜன்னலருகில் உட்கார்ந்துகொண்டு ராகவனை கவனித்துக்கொண்டிருந்தான்.. சந்தேகப் பட்டபடி இல்லாமல் ராகவன் நேர்மையாக நடந்துகொண்டது அவனுக்கு அவ்வளவு திருப்தியாக இல்லாததுபோல் இருந்தது. . 

ராகவன் காலியாக இருந்த இன்னொரு பக்கம் உட்கார்ந்துகொண்டு ஜன்னலுக்கு      வெளியே பார்த்துக்கொண்டிருந்தான்.நகர்ந்துகொண்டிருந்த நீண்ட பசும்புல் மைதானங் களும் வானு யர்ந்த மரக்கூட்டங்களும் காற்றில் ஆடி மிதக்கும் வண்ணப்பூக்களும் அழகழகான கட்டிடங்களும் பார்ப்பதற்கு சுகமாக இருந்தது. ஊர் அழகாகத்தான்  இருந்தது.

எதிரே ஒரு முதியவர் தினசரி ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தார். சற்று நேரத்தில்        அவர் இறங்கவேண்டிய ஸ்டேஷன் வந்ததும் முதியவர் பேப் பரை  ஸீட்டில்  வைத்து விட்டு இறங்கிப்போய்விட்டார். மறதியாக இருக்கும். மறுபடியும் ரயில் நகர்ந்தபோது காற்றில் படபடத்துக் கொண்டிருந்த அந்தப் செய்தித்தாளின் முதல்பக்கத்தில் தெரிந்த கொட்டை எழுத்துக்கள்   ராகவனின் கவனத்தை ஈர்த்தது. வாசித்துப்பார்த்தான்.

நேற்று நள்ளிரவு சிற்றுண்டிச்சாலையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒரு இந்திய மாணவன் பலமாகத் தாக்கப்பட்டான். தாக்கியவன் போதைப் பழக்கமுள்ள உள்ளூர் வாலிபன் என்று பார்த்தவர்கள் தெரிவித்தார்கள்.... போலீஸ் அந்த வாலிபனைத் தேடிக்கொண்டிருக்கிறது....

ராகவனுக்கு  துக்கமும் வேதனையும் பொங்கியது. ஏன் இப்படி நேருகி றது? அந்தப்  பையன் சரியான குடும்பத்தைச்சேர்ந்தவனாக இருக்கமாட்டான்.. பெற்றோர்களின்       அன்போ அரவணைப்போ கண்டிப்போ எதுவுமில் லாதவனாக இருக்கலாம்.  வாழ்க்கை    யில் எந்த விதப் பிடிப்போ அர்த்தமோ இல்லாதவனாக.. ஆத்திரமும் குழப்பமும்       நிறைந்த அநாதை யாக இருக்கலாம்.சரியான வசதி  இல்லாமலிருக்கலாம்..ஆனாலும் அவன் துன்புறுத்துவ தற்கு  இந்தியமாணவன்தான் ஏற்றவனாகத் தெரிந்தானா? இந்தியன் சாதுவானவன்..இங்கே நன்றாக பிழைக்கத்தெரிந்தவன் படிப்புள்ளவன் என்கிற மறைமுக மான  பொறாமைதான் அவன்  வன்முறைக்கு காரணமா? அல்லது இது யதேச்சையாக   பல சமயம் நேருவதா?  அவனுக்கு வருத்தமாக  இருந்தது.

இக்காலகட்டத்தில் ஒருவன் பிறருக்கு இழைக்கும் எந்தத் தீங்கும்  அந்த இரண்டு பேரு  டைய பிரச்னையாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. அவர்களுக்குப் பின்புலமாக   மறைந்து நிற்கும்  குலம் ஜாதி  மொழி  ஊர் என்று அத்தனையும் போட்டிபோட்டுக் கொண்டு  பதில டிக்கு முன்னால் வருகி றது.. அடிபட்டவனும் அடித்தவனும் அர்த்தமில் லாமல் போய்விடு கிறார்கள்.

ராகவனுக்கு உள்ளூர அழத்தோன்றியது. நமது வாழ்க்கைப்பிரச்னைகள்முழுவதுமே     நாம் நமது பிம்பங்களை நாமாக நம்பிக்கொண்டிருப்பதால்தான் என்று ஒரு தத்துவஞானி சொன்னது நினைவுக்கு வந்தது.

நிச்சயமாக..நிச்சயமாக அப்படித்தான் செய்திருப்பேன்...ஒரு பொருளை இழந்துவிட்டுத் தவிக்கும் துக்கம் ஒருவனுக்கு எவ்வளவு வேதனையைத் தரும் என்பதைத்தான் நான் பெரிதாக நினைக்கிறேன்-இப்போது செல்லுபடியாகாவிட்டாலும் என்றோ  ஒலித்த அந்த தேசப்பிதாவின் வார்த்தைகள் இன்னும் எப்படியோ நமக்கு தூண்டுதலாக  இருக்கத்தான் செய்கிறது..

என்னுடைய இந்த  சின்ன உதவி அந்த வெள்ளைக்காரப் பையனையும் ஜன்னலோரம் சந்தேகத்தோடு பார்த்துக்கொண்டிருந்த இன்னொருவனையும் ஏன் பாதித்திருக்கக்கூடாது? அவன்  இனிமேல் இந்தியர்களைப் பார்த்தால் மரியாதையுடனும் அன்புடனும் பார்க்க மாட்டானா?அவன் தன்  நண்பர்கள்  பெற்றோர்களிடம் பேசும்போது இந்தியர்களைப்பற்றி பேசும் போது  இந்த சம்பவத்தைப்பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ளாமலிருப்பானாநமது ஒவ்வொரு செயலும் மனித அபிப்ராயங்களில் நாம் விட்டெறியும் கல் தானே!  அது எழுப்பும் அலைகள் முடிவற்றது....

ராகவன் இறங்கவேண்டிய ஸ்டேஷன் வந்துவிட்டது. அவன் இறங்கிச் சென்றான்.   வேலை முடிந்து  வீடு திரும்பும்போது சற்று நேரமாகி விட் டது.

இரவுச்சாப்பாட்டுக்குப்பிறகு ஓய்வாக நாற்காலியில் சாய்ந்தவாறு தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

தொலைக்காட்சியில் அந்தசெய்தி ஒரு சில வினாடிகளில் கடந்துபோய் விட்டது.

 போலீஸ் விலங்கு மாட்டிக் கூட்டிக்கொண்டுபோனார்கள் அவனை.

அவன் திருடிய போன் அவனிடமிருந்து மீட்கப்பட்டது. ஸ்டேஷனில் பார்த்த அதே வெள்ளைக்காரப் பையன் தான்!

நான் அவ்வளவு அக்கறையாக அனுதாபத்துடன் ஓடிப்போய் அந்தத் திருட்டுப்பொருளை  அவனிடம் மீண்டும் கொடுத்திருக்கவேண்டாம் என்று இப்போது தோன்றியது. வருத்தமாக இருந்தது. போலீஸ் சோதனையில் அவன் இப்படி மாட்டிக்கொண்டிருக்க மாட்டான்.!

[  நன்றி  : கணையாழி]





No comments:

Post a Comment