vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Monday, January 4, 2016

கசங்கிய காகிதம்

கசங்கிய  காகிதம்

வைதீஸ்வரன்

                

    லயோலா  கல்லூரி  B.sc  காலாண்டுத் தேர்வு  எழுதிக் கொண்டிருந்தேன். எனக்கு பக்கத்தில்  உட்கார்ந்து  எழுதிக் கொண்டிருந்தவன்  கணேசன்ஒரே  வகுப்பு  என்றாலும்  நாங்கள்  ஓரிரு  வார்த்தைகளுக்கு  மேல்  பேசிக்  கொண்டதில்லை..

அப்போது  மேஜையின்  ஒரு  மூலையில் என் பேனாவை  வைக்கப் போய் 
அது  உருண்டு கீழே விழுந்துவிட்டதுஅந்த மேஜை  வகுப்பறைக்காகவே  அமைக்கப்பட்ட  எழுதுவதற்கு வசதியாக  அமைந்த  சாய்வான  மேஜை

அந்த  காலத்தில்  நாங்கள்  உபயோகப் படுத்திய  பேனாவும்  மையும்  நிப்பும்  கொண்டது

பேனாவின்  நிப்  முனை  உடைந்து  விட்டது.    கைவசம்  வேறு  பேனாவும்  இல்லாமல்  நான்  கவலையுடன்  உட்கார்ந்திருந்தேன்இதை  கணேசன்  பார்த்து  விட்டான்சட்டென்று  தன்   பேனாவை  எடுத்து  என்னிடம்  கொடுத்து..” எழுது”  என்றான். நான் மிகுந்த  நன்றியுடன்  பேனாவை  வாங்கிக் கொண்டு  எழுத ஆரம்பித்தேன். அப்போது  தான்  கவனித்தேன்அவனிடமும்  மாற்றுப்  பேனா  இல்லை!  “என்னடா...? “  என்றேன்அவன்  “ எழுது”  என்றான்..

 நேரம்  முடிந்து  நாங்கள்  வெளியில்  வந்த்தும்  நான்  மீண்டும்  அவன் தோளைப்  பிடித்து  “என்னடா...?  நீ  பரிட்சை  எழுதாம  என்னை  எழுதச் சொன்னே?  “என்றேன்

 முகத்தில் பாவம் எதுவுமில்லாமல் சொன்னான்.. “பாஸாகிற  அளவுக்கு 
நான் எழுதிட்டேன்.....நீ   பெயிலாக வேண்டாமேஅதனாலெ  தான்....இந்த  ஒரே  பேனாவுக்கு நம்ம ரெண்டு பேரையும்  பாஸ் பண்ண  வைச்ச புண்ணி யம்  கிடைச்சுது!..” சொல்லிவிட்டு சத்தமில்லாமல்  சிரித்தான்.

   சோடாபுட்டிக்  கண்ணாடி...அகலமான  முகத்துக்குப் பொருந்தாத பெரிய  மூக்கு.....மிக  ஒல்லியான  உடல்வாகு...துவைத்து  துவைத்துப்  போட்டுக் கொண்ட  பழுப்புக் கலர்  சட்டை பேண்ட்...இது  தான்  கணேசன்.

 சாதாரண  குடும்பத்தில்  சிறிய வீட்டில்  வசிப்பவன். அவன்.  ஏழ்மையோ  வேறென்ன    மனச்சிக்கலோ.......அவன்  யாரிடமும்   பழகாமல் கல்லூரியில் ஒதுங்கியே  இருப்பவன்ஏனென்று  தெரியாமல்  என்னிடம்  மட்டும்  ஆத்மார்த்தமாக  பிரியமாக  இருப்பான்.

 இத்தனைக்கும்  நான்  படிப்பில்  சுமார்  தான். அவன்  கெட்டிக்காரன். சிரமமில்லாமல்  பாடத்தைப்  புரிந்து கொள்கிற  உள்ளுணர்வு  அவனுக்கு  இயல்பாகவே  இருந்தது.. மற்ற  மாணவர்களைப்  போல்  புரிந்து  கொண்டதை  ஞாபகம்  வைத்துக்  கொள்ள வேண்டுமென்ற  கவலை  கூட  அவன்  முகத்தில்  தெரிந்ததில்லை.

   “இந்த  மாதிரி  படிப்புக்கு  வாழ்க்கையிலே  ஓரளவுக்கு  இடம்  ஒதுக்கினா  போறும்டா...”  என்பான்..எதோ ரொம்ப  வயதானவனைப்  போல்.

. “காண்டேகர்  நாவல்கள்  படித்திருக்கிறாயாப்ரேம்சந்த்...  பாரதியின்  கதைகள்  படித்திருக்கிறாயா?   “என்பான்.

  எனக்கு  இந்த  மாதிரி  விஷயங்களை  அறிமுகப்படுத்தியவனே  அவன் தான்..  இப்போது  நினைத்துப்பார்க்கும் போது  அவன்  சொன்ன  லேசான வார்த்தைகள்  எனக்கு  ஒரு உலகத்தையே  திறந்து காட்டியிருக்கின்றன.

  கணேசன்  வீட்டுப்  பக்கத்திலேயே  “ஸ்டார்”  தியேட்டர்அப்போது  அங்கு  பெரும்பாலும்  ஹிந்திப் படங்கள்  தான்   வெளிவரும். அதை ஒட்டிய மாதிரி  இருந்த  முட்டு சந்தில்  தான்  கணேசனின்  ஜன்னல் கம்பிகள்  வைத்த  ஓட்டு  வீடு.

ஹிந்திப்படத்தின்  விளம்பர  பலகைகளை  அந்த  ஜன்னல் கம்பிகளில்    மாட்டுவது  சௌகரியமாக  இருந்ததுஅதனால்  வந்த  லாபம், எந்த  ஹிந்திப் படம்  வெளியானாலும்  கணேசன்  வீட்டுக்கு  இரண்டு  இலவச பாஸ்  உண்டு.
 அதனால்  எனக்கும்  அதிர்ஷ்டம்  வாய்த்த்து..  அவன்  மூலம்  நிறைய  ஹிந்தி படங்களைப்  பார்த்தேன்.   முக்கியமாக  அந்தக்  காலத்தில்  மொழியை  மீறி எல்லோரையும்  மயக்கிய  இந்திப்  பாடல்களை  ரஸித்தேன்.

  நௌஷத்  இசையின்  மீது  அவனுக்கு  ரொம்ப  பிரியம். அவன்  தொண்டை  கட்டைத்  தொண்டை. சைகல்  போலவே அடித்  தொண்டையில் பாடல்களைப்  பாடுவான்.  . இந்தி  தெரியாத  நான்  அதே ட்யூனுக்கு  தமிழில்  வரிகளை  எழுதுவேன். என்  கவிதை  ஆர்வம் இப்படிப்பட்ட  அனுபவங்களினால்  வித்யாசமாகத்  தூண்டப்பட்டிருக்கலாம்.

  கல்லூரி  நாடகங்களிலும்  நான்  எழுதிய  பாடல்களை  அவன்  பாடுவான்.
நல்ல  வரவேற்பு.

  கணேசன்  இறுதித்தேர்வில்  மிக நல்ல  மார்க்குகள்  எடுத்திருந்தான். இருவருமே வேலை   தேடிக் கொண்டிருந்த  அந்த சமயத்தில்  அடிக்கடி  பீச்சுக்குப்  போய்  உட்கார்ந்து  கொண்டிருப்போம்.

  ஒரு நாள்  “கடற்கரைக்கும்  வேர்க்கடலைக்கும்  என்ன சம்பந்தம்?” என்று  கேட்டான்.  நான்  அவன் பதிலுக்காக  காத்திருந்தேன்.

 “நாம்  பார்ப்பதும்  கடலை...தின்பதும்  கடலை...”  என்று  பலமாக  சிரித்தான்.

  அவனுடைய  குடும்பப் பின்னணி  பரிதாபமானது. அவனுக்கு எட்டு வய்து இருக்கும் போது  அவன்  அண்ணாவையும்  தங்கையையும்  விட்டு விட்டு அவன்  அப்பா  வீட்டை  விட்டு  ஓடிப்போய் விட்டார். அவன்  அண்ணனுக்கு  ஒரு கால்  ஊனம். அவன்  அம்மா  இரண்டு  வீடுகளில்  வேலை  செய்து  குடும்பத்தைக் காப்பாற்றி இருக்கிறாள்அவன்  வீட்டில்  எல்லோருமே  எரிந்து எரிந்து  கோபமாகத்  தான் பேசிக் கொள்வார்கள்தவிர்க்கமுடியாத  சூழ்நிலையின்  கோபமும்  விரக்தியும் அவர்கள்  பேச்சில்  சுமுகமான  தொனியையே  அழித்து விட்ட்து.

   கணேசனுக்கு ஒரே  ஆறுதல்  என்  வீட்டுக்கு  வந்து  சிலநேரம் பொழுதைக் கழிப்பது தான். அப்போது   மனம் திறந்து  வாய் திறந்து  சைகல்  பாட்டுக்களைப்  பாடிக் கொண்டிருப்பான்.

  இவன்  பாட  ஆரம்பித்தால்  என்  பக்கத்து  வீட்டில் உள்ள  ஜன்னல்  கூட சற்று திறந்து  கொள்ளும். யாரோ  அங்கே நின்று  கொண்டு  இவன்  பாட்டைக் கேட்டிக் கொண்டிருப்பார்களோ!...கணேசனும்  அந்த  ஜன்னலுக்காக  பாடிக் கொண்டிருப் பதாக  எனக்கு  ஏதோ ஒரு  ஐயம் லேசாக  வந்து கொண்டிருந்தது.

   ஒரு  நாள்  அப்படிப் பாடிக் கொண்டிருப்பவன்  பாதியில்  நிறுத்தி  “டேய்.. பாட்டைக் கேட்டு  மயங்கி  எவளாவது..காதலிக்க முடியுமா? “ என்றான்.

 “என்னடா...எவளாவது  ..பக்கத்து  வீட்டுப் பெண்  உன்  பாட்டைக்  கேட்டு  மயங்கி உன்னை  “லவ்”  பண்ணுவான்னு நெனைக்கிறயா”” என்று  சொல்லி சிரித்தேன்.
ஆனால்  அவன்  சிரிக்கவில்லைசற்று நேரம்  மௌனமாகி விட்டான்

  “போடா..fool…அதெல்லாம்  சினிமாவுலெ  மட்டும்  தாண்டா  நடக்கும். இந்த  ஜன்மத்துலே  அப்படி  எதுவும்  எனக்கு  நடக்காது.” என்று  சொல்லி விட்டு  சட்டென்று  போய் விட்டான்.

  அடுத்த  ஒரு  மாதம்  அவன்  என்  வீட்டுக்கு  வரவில்லைஆனால் அன்று திடீரென்று  வந்தவன்  “ டேய்... பக்கத்து  வீட்டுப் பெண்ணுக்கு  இன்று  ஜானவாசம்...உனக்குத்  தெரியுமா? “  என்றான்  மெல்லிய  குரலில்.

  எதைப் பற்றியும்  ஒட்டுதலில்லாமல்  இருந்த கணேசனுக்கு     இவ்வளவு  விவரம்  அவனுக்கு  எப்படித்  தெரிகிறது?  இதன் மேல் என்ன  அக்கரை?  நான் கேட்க  நினைத்தேன்..  ஆனால்  கேட்கவில்லை. அவன் கேள்வியைப்  புரிந்து கொள்ள  முயற்சி செய்தேன்.

  அன்று  கணேசன் என்  வீட்டிலேயே  சாப்பிட்டான்சாப்பிட்டவுடன்    “போறேண்டா..”  என்று  கிளம்பினான்.

  வாசலுக்குப் போய் “  புதன் கிழமை  சந்திக்கலாமா? “ என்றேன்.

  “எந்த புதன்கிழமை? “   என்று  விரக்தியாக சிரித்தான்.

    “HEAVEN  KNOWS  MR ALLYSON “    படம்  பார்த்திருக்கயா?  “ என்று  கேட்டு விட்டு  போய் விட்டான். ..அந்தப்  படம்  அப்போது ஸ்டார்  டாக்கீஸில்  ஓடிக் கொண்டிருந்தது.

 பிறகு ஒரு  வாரமாக  கணேசன்  வரவில்லை. அவன்  அவ்வளவு  நாட்கள்  என்னைப்  பார்க்க  வராமல்  இருக்க  மாட்டான்!!

 ஒரு  நாள் இரவு பத்தரை மணி  இருக்கும்  வீட்டு  வாசலில்  யாரோ வந்து நின்றார்கள்அது  கணேசனின் அண்ணாகையில் தடியைத்  தாங்கிக் கொண்டு சாய்ந்து  நின்று  கொண்டிருந்தார். உடம்பு  பதட்டமாக  இருந்தது.

  “எங்களுக்குத்  தெரிந்த   இடமெல்லாம்  தேடி விட்டோம்....கணேசனை மூன்று  நாட்களாகக் காணவில்லைஉங்க  வீட்டுக்கு  வந்தானா? “ என்று  கவலையுடன் கேட்டார்.

  “ அய்ய்யோ ..வரவில்லையே!   எங்கே  போனான்? “  அதிர்ச்சியுடன்  நின்றேன்
   அவர்  உடனே  திரும்பிப் போய் விட்டார்.

 அடுத்த  நாள்  நான்  கணேசன்  வீட்டுக்கு  ஓடினேன்..தகவல்  ஏதாவது  தெரியுமா...என்று   கண்டறிய....

அப்போது  தான்  கணேசனை  வீட்டுக்குக் கொண்டு வந்திருந்தார்கள்இரண்டு  நாட்களாக  மார்ச்சுவரியில்  வைத்திருந்தார்களாம்.   தண்டவாளத்தின்  ஓரத்தில்  கிடந்ததைப்  பார்த்து  ரயிவே அதிகாரிகள்  ஆஸ்பத்திரிக்கு  அனுப்பியிருக் கிறார்கள்அவன்  சட்டைப்  பையில்  வீட்டு விலாஸம்  தெரியும்படியான  காகிதங்கள்  எதுவும்  இல்லை.

 கிழிந்து  தொங்கிய  சட்டைப்பையில்  ஒரே ஒரு கசங்கிய காகிதம் மட்டும்  தான் இருந்தது....  அது  “சைகல்”  பாட்டின்  மெட்டுக்கு  நான்  எழுதிய  காதல் வரிகள்....!.
 கணேசன்  தற்கொலை  செய்து கொண்டிருப்பான்  என்று  என்  மனசு  இன்று  வரை  உறுதியாக  நம்ப  மறுக்கிறது.

 வாழ்க்கையில்  வெற்றி பெறத்  தேவையான  அபாரத்  திறமைகள் அவனிடம்  இருந்ததுஇருந்தும்  வாழ விருப்பமில்லாமல்  மாய்த்துக் கொள்ள அவனுக்குள்  யார்  மீதோ  எதன்  மீதோ  தீராத  கோபம்  கனன்று கொண்டிருந்ததா?

சூழ்நிலையின்  மீது  ஏதோ  ஒரு தீரா வெறுப்பா?   தெரியவில்லை.

 தற்கொலை  செய்து  கொள்ளும்  அளவுக்கு அவன்  அவ்வளவு  பேதைத்தனமா னவனாஇன்றும்  அவனை நினைத்துக்  கொள்ளும் போது  மனம்  துக்கத்தில்  ஆழ்ந்து  விடுகிறது   ..

இப்படிப்பட்டவனுடைய   தோழமை  என்  இளம்பருவ வளர்ச்சிக்கு  ஒரு  நல்ல தூண்டுதலாக  இருந்திருக்கிறதே!!  ...............................  .(அம்ருதா  -ஜனவரி  2016)

No comments:

Post a Comment