vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Thursday, August 3, 2017

கந்தல் புத்தகம் - வைதீஸ்வரன்

கந்தல் புத்தகம்
வைதீஸ்வரன்



 எனக்கு  மூன்று  அத்தைகள்  இருந்தார்கள்.   எனக்கு  ஞாபகம் தெரிந்த  நாட்களிலிருந்து   என்  அத்தைகள்  தலை மழித்துக் கொண்டு  வெள்ளை நார்மடிப் புடவையுடன்  வீட்டுக்குள்  பதுங்கிப் பதுங்கி  நடப்பதைத்  தான்  பார்த்திருக்கிறேன். ஆண்கள்  இல்லாத சமயங்களில்  மட்டும்  தான்   அவர்கள் வீட்டில் சற்று சுதந்திரமாக  கூடத்துப் பக்கம் வருவார்கள்.  அவர்கள்  எங்களைப் போலக் குழந்தைகளுடன்  இருக்கும் போது மட்டும்  தான்.. சிரித்து  சகஜமாகப்  பேசுவார்கள். கூடத்துப்  பக்கம் யார்  இருந்தாலும்  அவர்கள்  அறைக்குள்  போய் மறைந்து கொள்வார்கள்


 என்  அத்தைகளில்  முக்கியமாக  முத்து  அத்தையை  எனக்கு மிகவும்  ஞாபகம்  இருக்கிறது.. முத்து அத்தை  தான் எங்களுடன்  அதிக காலம் தங்கியிருந்தார்.  அவளுடைய  பார்வையும்  பாசமும்  அரவணைப்பும் எனக்குள் இன்றும் மறந்து போகாமல் இருக்கிறது..


அந்த வருஷங்களில் நான்   என்  அம்மாவிடம்  பழகியதை  விட அத்தையிடம்  போய் பேசிக் கழித்த பொழுதுகள்  தான் அதிகமாகவே இருந்தது. அவள் அறையில் தனியாக  இருக்கும் போது என்னிடம் நிறைய  விளையாடுவாள்.   கதைகள்  சொல்லுவாள்பாட்டுக்கள் சொல்லிக் கொடுப்பாள். இப்போது  நினைத்துப்  பார்க்கும்  போது  இந்த  மாதிரி  அத்தைகள்  தான்  நமக்கு  ஆரம்ப பள்ளிக்கூடமாக  இருந்திருக்கிறார்கள்  என்று  தோன்றுகிறது!!


ஆனாலும் அத்தனை  சுதந்திரமாக  பரிவுடன்  கதையும்  பாட்டுக்களும்  சொல்லி சிரிக்க வைக்கும்  அத்தையின்  முகம்  யாராவது வந்து விட்டால் இறுகிக்  கொண்டு விடும்.  மௌனமாகி விடுவாள்அவள்  சந்தோஷமாக  இருப்பது  மற்றவர்களுக்குப்  பிடிக்காதென்று அவளுக்குள்   ஏதோ  ஆழமான எண்ணம் வடுவாகி  இருக்க வேண்டும்


விவரமறியாத  அந்த வயதில் கூட எனக்கு அவளுடைய அந்த  சுபாவம் தெரிந்து  கொண்டு  தான்  இருந்தது.   அத்தை  ஏன்  இப்படி  ஆகி விடுகிறாள்எதைப் பார்த்து  யாரைப் பார்த்து  இப்படி  பயப்பட்டு  ஒடுங்கிப் போய் விடுகிறாள்?  அவளை சுற்றி ஏதோ கண்ணுக்குத் தெரியாத விரோதம் படர்ந்திருப்பதாக  ஒரு மனப்பான்மை.!   ஏன் என்று  தெளிவாக  யோசிக்கத் தெரியாவிட்டாலும்  காரணமில்லாமல்  எனக்குள்  அவளுடைய அந்த  சுபாவம்  வருத்தத்தைக்  கொடுத்தது..


அன்றைய வறுமையான குடும்பசூழல்களில்  இப்படி  நிறைய  பெண்குழந்தைகளைப் பெற்று விட்ட  தந்தைக்கு  தம் குழந்தைகளை  இரண்டாந்தாரமாகவோ  மூன்றாந்தாரமாகவோ  செலவில்லாமல் வயதானவர்களுக்குதாட்டி’  விடுவது  தான்  உறுத்தலில்லாத  தீர்வாக  இருந்திருக்கிறதுஆனால்  அதே பெண்கள்  நாலைந்து  வருடங்களுக்குள்  விதவையாகி பிறந்த வீட்டுக்குத்  திரும்பிக் கொண்டிருந்த  அதிர்ச்சியும் சகஜமாக போய் விட்டதுஅவர்கள்     வேதனைகளையும் வெறுப்பையும் தங்களுக்குள் புதைத்துக் கொண்டு தான்  வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்திருப்பார்கள். அவர்களுக்கு  வாழ்க்கையில் இருந்த ஒரே பிடிப்பு  எங்களைப் போன்ற  குழந்தைகள்  தான்.

 நான்  இங்கே  சொல்ல  நினைத்தது வித்தியாசமான  பெண்மணியாக  என்  நினைவில்  இன்றும் இடம்   பிடித்திருக்கும் என்  முத்து அத்தையைப்  பற்றி...  இளம் வயதிலேயே  அவள்  புருஷனை  இழந்து  வீட்டுக்கு  வந்திருக்க வேண்டும்  வெள்ளைப் புடவையிலும்  கூட  அந்த  அத்தை  சுத்தமாக  லட்சணமாக  இருப்பாள் இளம்வயது நடிகை முதியவயது வேஷம்  போட்டுக் கொண்டது போல் இன்று எனக்குத் தோன்றுகிறது!!


எங்கள்  வீட்டில் எல்லோரையும்  விட  அந்த  அத்தையைப் பார்க்கும் போது  எனக்கு  உற்சாகமாக  இருக்கும்  எனக்கு  அம்மா கூட  அவசியமில்லை  எப்படி தன் சொந்த வாழ்க்கையில் நேர்ந்த பேரிடியை  அவ்வளவு ஆழமாகப் புதைத்துக் கொண்டு  அன்பை மட்டும் பரிமாறிக் கொண்டாள்  என்று  எனக்கு இன்று வரையிலும்  ஆச்சரியமாக  நெகிழ்ச்சியாக  இருக்கிறது.


அந்த  அத்தை  எனக்கு  சொன்ன  கதைகளும்  பாட்டுக்களும் ஓயாதவைஎந்தப் பள்ளிக் கூடத்தில்  யாரிடம்  போய்   இவ்வளவு   விஷயங்களைத் தெரிந்து கொண்டிருப்பாள்எனக்கு  எழுதவும் படிக்கவும்  விருப்பத்தை  வளர்த்ததற்கு  முத்து  அத்தை  தான்  முதல் காரணமாக  இருந்திருக்கிறாள்.. அவளுக்கு இருந்த  பொக்கிஷமெல்லாம் அவளிடம்  இருந்த துருப்பிடித்த  பூட்டுப் போட்ட அதுங்கிய  தகரப்  பெட்டி  ஒன்று  தான்.   அவள்  யார்  கண்ணிலும் படாமல்  தன் பெட்டிக்குள்  இரண்டு மூன்று  நோட்டுப் புத்தகங்களை  அடுக்கி வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்யாருக்கும் தெரியாமல் அடிக்கடி அவைகளை எடுத்துப் படித்துக்  கொண்டிருப்பதை  பார்த்திருக்கிறேன். அவள் தானே  எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.


முத்து அத்தை  சில வருஷங்கள்  இப்படி  ஒதுங்கி  ஒதுங்கித்  தான்  வாழ்ந்திருக்க வேண்டும்ஆனால் அவள் வாழ்க்கையில் அப்படி ஒரு திருப்பம்...ஒரு  நாள் எதிர்பாராமல் நடந்து  விட்டது!


அன்று அவள்  செய்த அந்த ஒரு  காரியம் அவளை   வெளிச்சத்துக்குக்  கொண்டு வந்து  விட்ட்து. அன்று வரை  அசிரத்தையாக  நடத்தப் பட்டு வந்த  பிறருடைய  அபிப்ராயத்தை  ஒரே நாளில் மாற்றிப் போட்டு விட்டது.. 


 ஒரு நாள்  நள்ளிரவுஎல்லோரும் ஆழ்ந்து தூங்கிக்  கொண்டிருந்த  சமயம்கொல்லைக் கிணற்றுப் பக்கம் திடீரென்று பயங்கரமாக  சத்தம் கேட்டது. இரண்டு பேருக்கு இடையில் ஏதோ கைகலப்பு போல் ஒரு  கூச்சல்!  அப்பா  அம்மா நான்  அக்கா  எல்லோரும்   ராந்தலை  எடுத்துக்  கொண்டு  கிணற்றடிக்கு  ஓடிப் போய் பார்த்தோம்.


   கிணற்றோரம்  கரடுமுரடான கல் தரையில் கட்டுக் குட்டான  ஒரு  பையன்     அரை நிஜாருடன் விழுந்து கிடந்தான். அவன் கழுத்துப் பக்கம் அடிபட்ட அடையாளத்துடன் வீங்கி இருந்தது. அவன்  பக்கத்தில்  ஒரு  அதுங்கிய  தோண்டி கிடந்ததுஎன்  அத்தை அவன் காலில் மிதித்து கொண்டு அழுத்தமாக நின்று கொண்டு   கிணற்றுத்  தாம்புக் கயிற்றை  இழுத்து  அவனைக்  கட்டிப்   போட  முயன்று கொண்டிருந்தாள்.


  “முத்தூ...என்னாச்சு?  அய்ய்ய்யோ...என்னாச்சுடீ?   “  என்று  அப்பா  கத்தினார்


அண்ணா.....மொதல்லே இவனைப் பிடிச்சுக் கட்டிப் போடுங்கோ!    இந்த திருட்டுப் பயலை போலீஸ் ஸ்டேஷனுக்கு   இழுத்துண்டு  போ அண்ணா? “


என்ன ஆச்சு  முத்தூ..?  யாரு  இவன்?...”


 “ சொல்றேன்...ரெண்டு நாளாவே பின்கட்டுலே ஏதோ சத்தம்  கேட்டுண்டு இருந்துது. நான் கவனிச்சிண்டிருந்தேன்.. நேத்து  நடு ராத்திரி மறுபடியும்  சத்தம்  கேட்டுது வந்து  பாத்தேன். இந்தக் கடங்காரன் சுவரேறிக் குதிச்சு  நம்ப  சமையல் ஜன்ன  கம்பியை பேத்துண்டிருந்ததைப் பாத்துட்டேன்  அவனுக்குத் தெரியாம  பின் கதவைத் திறந்துண்டு போயி  கிணத்துத் தோண்டியால  மண்டையிலே ஒருபோடுபோட்டேன்...இவனை இழுத்துண்டு போங்கோ அண்ணா..”.. என்றாள்...தாம்புக் கயிற்றை சுற்றி இறுக்கியவாறு..


நாங்கள் எல்லோரும்  ஆச்சரியமும் திகிலும் கலந்து  நம்ப முடியாமல் அத்தையையும் கீழே கிடக்கும் அந்தக்  கள்ளனையும் பார்த்துக்  கொண்டு நின்றோம்.

முத்தூ..  நீயா..இப்படி செஞ்சே? “  அப்பாவுக்கு அத்தையைப் பார்க்கும்போது ஏதோ விஸ்வரூபமாக  தெரிந்திருக்க வேண்டும்.


முத்தூ...நீ ரொம்ப பெரிய  மனுஷீ!..” 


 “ அண்ணா.....ஏதோ ஆபத்துன்னு தெரிஞ்சுது.. ஓடி வந்தேன்...  ஏதோ  நமக்கு  நல்ல வேளை....இவனை  இழுத்துண்டு போங்கோ! “ 


அடுத்த  நிமிஷம் அத்தை  கூச்ச உணர்வு மீண்டு வர நத்தையைப் போல  தலையைப் போர்த்திக் கொண்டு   அங்கே  மேலும்  நிற்க முடியாத  சங்கடத்துடன்  உள்ளே  போய் விட்டாள்.


 ஆனால்  அந்த சம்பவத்துக்குப்  பிறகு  முத்து அத்தைக்கு  வீட்டில் கௌரவமும்  கவனிப்பும்  கூடி விட்ட்து.  “முத்து.. நீ  சாப்பிட்டியா?..”  என்று  என் அப்பா கேட்டது அது தான்  முதல் தடவைஅத்தையை திடீரென்று  கரிசனத்துடன் நடத்தினாள் அம்மா.


 “முத்தூ....எவ்வளவு நாள்... இந்தப் பழைய  புடவையையே  கட்டிண்டிருப்பேஇந்தா...புதுசு...”  என்று  அப்பா  ஒரு  நாள்  ஒரு புதுப் புடவையை  வாங்கிக் கொடுத்தார்


  அத்தை  இதையெல்லாம்  சங்கடத்துடன் தயக்கத்துடன்  தான்  ஏற்றுக் கொண்டிருந்தாள்  இருந்தாலும்  இப்போது அத்தை கூடத்தில் சகஜமாக நடமாட  ஆரம்பித்தாள்  குடும்பத்துக்கு வேண்டிய  உதவிகளை   சுதந்திரமாக  உரிமையுடன்  செய்யத் தயக்கமில்லாமல்  இருந்தது. அவளுக்கு.  ஏதோ மீண்டும் நிம்மதி வந்த மாதிரி என்னை  அடிக்கடி வாஞ்சையுடன்  கட்டிக்  கொண்டாள்.


இப்போதெல்லாம்  அவள்  சகஜமாக என்னைக் கூட்டிக்  கொண்டு  கோவிலுக்குப் போக  ஆரம்பித்தாள்  மாலை நேரங்களில் அவளுடன் கோவிலுக்குப்  போவது எனக்கு ஒரு  பெரிய உற்சாகம். கோவில் மணி சத்தம் வெளியெங்கும் பரவிக் கொண்டிருக்கும் அந்தி வேளையும் ஆராதனைகளும் அர்ச்சனைகளும் அங்கங்கே  சந்நிதிகளில்  நடந்து கொண்டிருக்கும் காட்சிகளை நான் மிகவும் ரஸித்து வேடிக்கை பார்ப்பேன்.


தவிர அத்தை  ஒவ்வொரு சாமி சிலையையும் காட்டி  அந்த  சாமி பற்றிய  கதைகளை படிக்கட்டில் உட்கார்ந்து  கொண்டு ஸ்வாரஸ்யம்  குன்றாமல்  சொல்லுவாள். அந்தக் கதைகள் ஒவ்வொன்று என் கற்பனைகளையும் வினோதமான காட்சிகளையும் எனக்குள் விரித்துக் கொண்டே இருக்கும்எந்தப் பள்ளிக்கூட்த்தில் எனக்கு இதையெல்லாம்  சொல்லித்  தருவார்கள்?


 அப்போது  ஒரு  சமயம்  யாரோ  ஒருவர்  நொண்டி நொண்டி போவதைக்  கவனித்தாள்அவரைக்  கூப்பிடச் சொல்லி என்னிடம் சொன்னாள்.


  அவரை  ஓடிப் போய்க் கூட்டிக் கொண்டு வந்தேன். அவருக்கு வாலிப வயது தான்  இருக்கும்
தம்பீ...ஏன்  இப்படி நொண்ட்றேஎப்படி  ஆச்சு?”  என்று கேட்டாள்  அத்தை


“  வீட்லே  அட்டாளிலே  பாத்திரம் எடுப்பதற்காக  ஏறினேன் சறுக்கி கீழே விழுந்த்திலே  கணுக்கால் மடங்கி  வீங்கிப் போச்சும்மாசரியாக மாட்டேங்குது!..’ 


அத்தை  அவருடைய  காலைப் பற்றி விசாரித்து அதை  சோதித்துப்  பார்த்தாள்அதை குணப்படுத்தலாம்  என்று சொன்னாள்.


 “ நாளைக்கு  சாயரட்சைக்கு இருட்டறதுக்கு முன்னால எங்க வீட்டுக்கு வந்துரு  நான்  பாக்கறேன்...சரியா? “ என்றாள்  அவன்  சரியென்றான்.


 அத்தையை நான்  வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்  அன்று இரவு அத்தை  தன் பழைய  ட்ரங்குப் பெட்டியை திறந்து ஏதோ ஒரு கந்தலான புத்தகத்தைப் பிரித்து ஏதோ கவனமாகப் படித்துக் கொண்டிருந்தாள்.


மறு நாள் சாயங்காலம் அந்திசாய்கிற நேரத்தில்  அந்த ஆள்  எங்கள்  வீட்டுக்கு வந்தான். அத்தை  அவரை கொல்லையில்  கிணற்றடிப் பக்கம் அழைத்துக்  கொண்டு போய்  தெற்குப் பக்கமாக  நிற்கச் சொன்னாள்.


உன்னிப்பாக பார்த்துநரம்பு முடுச்சுப் போட்டுண்டுருக்கு!...”என்றாள்  இறுகிக்கொண்டிருந்த வலது  காலை முன் வைத்து நிற்கச் சொன்னாள்.


நான் இவற்றையெல்லாம்  வாசல்படியில் உட்கார்ந்து கன்னத்தில் கை வைத்துக் கொண்டு  ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.


  அத்தை   தன் பெட்டியிலிருந்து  அந்தப் பழைய நோட்டுப் புத்தகத்தைக் கையுடன்  கொண்டு வந்திருந்தாள். இரண்டொரு முறை அதன் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து விட்டு  தீர்க்கமாக மூச்சு விட்டுக் கொண்டாள் தன் புடவைத் தலைப்பில் ஏழெட்டு முடிச்சுகளைப் போட்டுக் கொண்டாள் .


அந்த தலைப்பை வேகமாக சுழற்றி சுழற்றி அவன் கணுக்காலில் ஒரு வித லயத்துடன்  அடித்துக் கொண்டே  “விஸ்வம்..விஸ்வம்...”  என்று வேகமாக ஏதோ மந்திர உச்சாடனங்களை சொல்லிக் கொண்டிருந்தாள்.  சொல்லிக் கொண்டிருந்தாள் என்பதை விட மந்திர சப்தங்கள் அவள் உள்ளேயிருந்து தன்னிச்சையாக  எழும்பி அவள் உதடுகளை அதிர வைத்துக் கொண்டிருந்த்தாகத் தோன்றியது. .  அவள்  இமை ரப்பைகளும்  உதடுகளும்  தன்னிச்சையாக நடுங்கிக் கொண்டிருந்தன. அத்தையின் முகம் ஏதோ ஒரு நிறமாக சிவப்பென்று சொல்லமுடியாத  நிறமாக மாறிக் கொண்டிருந்தது. ..


அந்த தலைப்பின் முடுச்சுகள் ஒவ்வொரு முறையும் அவன் கணுக்காலில் அடித்து விலகும்போது அவன்  வலியால் துடித்து   காலை இழுத்துக் கொள்ள முயன்றான் அத்தை இதை எதிர் பார்த்தவள் போல ஏற்கனவே அவன் காலை அழுத்தமாக தன் காலில் அழுத்திக் கொண்டிருந்தாள்அத்தை  ஒரு வித லயமாக அந்த  முந்தானையை வெளியில்  சுழற்றி அடித்துக் கொண்டே இருந்தாள்சற்று நேரத்தில் அவளுடைய வேகமும்  கவனமும்  ஒருவித  உச்ச நிலையை தொட்டது  போல்  இருந்த்து.  .  திடீரென்று ஒரு கணத்தில் அத்தை  தன் முந்தானையை  அவன்  முழங்காலருகில் சுழற்றி படாரென்று சத்தம்  ஒலிக்க உதறினார். என்னால் நம்ப முடியவில்லை. அந்த  தலைப்பில் அத்தை போட்டிருந்த அத்தனை முடிச்சுகளும்  அவிழ்ந்து போயிருந்தன.


   அந்த ஆள்  ஒரு  துள்ளுத்  துள்ளிவென்று கத்திக் கொண்டு எழுந்து நின்றான்.


  அத்தைக்கு  நெஞ்சின் படபடப்பு அடங்கி மெள்ள மெள்ள முகமும் உடம்பும் சகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. அத்தை இரண்டு மூன்று முறை கொட்டாவி விட்டார்உடம்பை முறித்துக் கொண்டார்.


 அவனைப் பார்த்துஎன்னாப்பா...எப்ப்டி இருக்கு சுளுக்கு? “ என்றார்.


அந்த மனிதனுக்கு நம்பவே முடியவில்லை.


எப்ப்டி...எப்படி....என்று  அவர் தன் காலையும்  அத்தையையும்  பார்த்துக்  கொண்டு  கண்ணில் நீர் பெருக  நின்று கொண்டிருந்தார். கணுக்காலில் வலியே இல்லை. காலிலிருந்து ஒரு பாரத்தை இறக்கி வைத்த்து போல் அவன் நிம்மதியாக நின்று கொண்டிருந்தான்.


எல்லாம்  சரியாப்...போச்சு....போய்ட்டு வா தம்பீ” .”  என்றார்  அத்தைஅந்த ஆள்  அத்தையின் முன் சாஷ்டாங்கமாக விழுந்து  நமஸ்கரித்தான்.


அம்மா..நீங்க  கண் கண்ட  தெய்வம் அம்மா..” என்று கண்ணீர் வழியக் கை கூப்பினான்.


 “உங்களுக்கு  நான்  என்ன தரணும்..” 


இனிமே அட்டாளியிலே  ஏறும்போது கவனமா  ஏறணும்...அவ்வளவு தான்..!  “  என்றாள் அத்தை.


                   **************


அதற்குப் பிறகு அத்தையைப் பார்க்கும் போது எனக்கு ஏதோ பாசத்தை விட பக்தியாக இருந்த்துகுறுகுறுப்புத் தாங்காமல் நான்  அத்தையிடம் ஒரு நாள் நேரடியாகக் கேட்டேன்.


 “இதெல்லாம்  என்ன அத்தைமந்திர வித்தையாஒனக்கு அதெல்லாம் தெரியுமா?


 அத்தைக்கு கண்ணில் ஈரம் படிந்தது.  “கோந்தே...இதெல்லாம்  ஒன் அத்திம்பேர் சாகறதுக்கு முன்னால  எனக்கு சொல்லிக் கொடுத்ததுஇதெல்லாம்  பயிற்சி பண்ணி வைச்சுண்டா  நாலு பேருக்கு உபகாரமா இருக்க முடியும்னு சொல்லிக் கொடுத்தார். இந்தக் கந்தல் புத்தகம் தான் எனக்கு அவர் கொடுத்து விட்டுப் போன  சொத்து”  என்று என்னை அணைத்துக் கொண்டாள்.


                      *********


அந்தக் கந்தல் புத்தகத்தை நான் காப்பாற்றி வைக்கத் தவறி விட்டேன் அத்தை போன பிறகு நாங்கள் வேறு ஊருக்குப் போய் வேறு வீடுகளுக்கு மாறி வாழ்க்கை  கடந்த காலத்தை செல்லரித்து விட்டது போல் ஆகி விட்டது.


 ஆனால் திடீரென்று இன்று எங்கு பார்த்தாலும் வித்யாசமான சிகிச்சை முறைகளை விளம்பரப் படுத்தும்  அமைப்புகளை பார்க்கிறேன் இந்த முறைகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்த சிகிச்சை முறையாக விளம்பரங்கள் சொல்லுகின்றன.


 ஜப்பானிலிருந்து வந்த மூதாதைகளின் ரேக்கி சிகிச்சை முறை    சைனாவில் ஜென் ஞானிகள் உண்டாக்கிய ப்ராணிக் ஹீலிங் என்று  வெவ்வேறு அமைப்புகள் ஏராளமான லாபங்களை திரட்டும் வெளிநாட்டு வாணிகமாக  இயங்கிக் கொண்டிருக்கின்றன.


    அந்தக் கந்தல் புத்தகம் போல இன்னும் ஏராளமான  கந்தல் புத்தகங்கள் எத்தனையோ ஆண்டுகளாக நம் நாட்டிலிருந்து  களவு போயிருக்க வேண்டும் என்று  நம்புகிறேன்.



அம்ருதா  ஆகஸ்ட்  2017



No comments:

Post a Comment