vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Saturday, July 30, 2016

தினமணி புத்தக மதிப்புரை: வைத்தீஸ்வரன் கதைகள்.......... 25 July 2016



வைதீஸ்வரன் கதைகள்
- எஸ்.வைதீஸ்வரன்;
 
தினமணி புத்தக மதிப்புரை: வைத்தீஸ்வரன் கதைகள்..........
25 July 2016 
பக்.304; ரூ. 225;  
கவிதா பப்ளிகேஷன்,  
                           சென்னை17, 
044- 2436 4243.                                              
தமிழில் புதுக்கவிதையின் மறுமலர்ச்சிக் காலத்தில் கவனிக்கத்தக்க கவிஞராக அறிமுகமானவர் எஸ். வைதீஸ்வரன். பிறகு சிறுகதைகளையும் எழுதத் தொடங்கினார். அவர் சிறந்த நவீன ஓவியரும்கூட.
அந்த வகையில் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் பலவும் ஒரு கவிஞனின், ஓர் ஓவியனின் மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளன.
"பிம்பம்' என்ற கதை ஒரு மூதாட்டியைப் பற்றியது. "கதையாக' அது தொடங்கினாலும், முடியும்போது அதற்கு ஒரு கவித்துவம் வந்துவிடுகிறது. அந்தக் கவித்துவ அம்சம்தான் நம் நெஞ்சைத் தொட்டு நிற்கிறது.
இவரது எழுத்து பாணி என்பது சம்பவங்களின் அடுக்குகள் என நின்றுவிடுவதில்லை. "கனவில் கனவு' சர்ரியலிச வகையைச் சேர்ந்தது. கிராமப்புறத்தில் இளமைக்கால அனுபவங்களும் இவருடைய கதைகளுக்கு முக்கியப் பின்புலம்.
"மோதிர விரல்' அசாதாரணமான வாழ்க்கைப் பார்வையை சுலபமாகச் சொல்லிவிட்டுப் போகிறது.
வைதீஸ்வரன் கதைகள் என்ற பெயர் கொண்டிருந்தாலும் இது அவருடைய சிறுகதைகளின் முழுத் தொகுப்பு அல்ல. 1960-களிலிருந்து தற்போது வரையிலான 34 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இந்தப் புத்தகம்.
கவிதைகள் - அதிலும் புதுக்கவிதைகள் - கவிஞனின் ஆழ்மனதைச் சுருங்கச் சொல்வன. ஓவியமும் ஒரு கட்டத்துக்குள் ஓவியனின் மன உலகை அடக்க முயற்சிக்கிறது.
இந்த இரண்டு அம்சங்களையும் கவிஞரும் ஓவியருமான வைதீஸ்வரனின் கதைகளில் காணலாம்.


Sunday, July 24, 2016

ஒரு புகைப் படத்தின் கதை

ஒரு புகைப்படத்தின் கதை
 

வைதீஸ்வரன்


இந்த  புகைப் படம்  எடுத்த போது  எனக்கு  ஐந்து வயது 
இருக்கலாம். சேலத்தில்  என்  அப்பாவின்  நண்பர்ஒருவர் 
திடீரென்று  ஒருபோட்டோ ஸ்டுடியோவை ஆரம்பித்து
விட்டார்.

அப்போது அந்தத் தொழில் மிக  வித்யாசமானது.  நூதன மானது.  ஆனால்  அவர்  தொழிலில்  மிக ஊக்கமானவர். 
தன்  நண்பர்களையெல்லாம்  அழைத்து வந்து  போட்டோ எடுத்துக்கொள்ளும்  ஆர்வத்தைத்  
தூண்டிவிட்டார்.

 அநேகமாக  நான்  பிறந்த பிறகு  எடுத்துக்கொண்ட 
முதல் போ ட்டோ  இதுவாகத் தான் இருக்கும்.  அதற்கு முந்தைய  வருஷங்களில்  போட்டோ  எடுப்பதை என் 
பாட்டி  பிடிவாதமாகத்  தடுத்துநிறுத்திவிட்டாள். 
போட்டோ எடுத்தால்  ஆயுசு குறைந்து  விடும்என்பது  அவளுடைய  அபிப்ராயம்.

இப்போதெல்லாம் வயிற்றுக்குள்ளிருந்தே குழந்தையை போட்டோ எடுக்க  ஆரம்பித்து  விடுகிறார்கள் !! 

இந்த போட்டோவில் என்கூட  நிற்கும் அக்கா  எனக்கு 
இர ண்டு வயது மூத்தவள்.  சாயங்காலங்களில்  திண்ணை
யில்  கல்லாட்டமும் பாண்டியும்  மற்ற  சிறுமிகளோடு 
விளையாடிக் கொண்டிருப்பதைத் தடுத்து  என் அம்மா  அவளை  இப்படி  இழுத்து வந்து  விசேஷமாக  அலங் 
கரித்து  போட்டோவுக்குத்  தயார் செய்ததில்  அவளுக்கு ரொம்பக் கோபமும்  அழுகையும்  வந்திருக்கவேண்டும்.

 “போட்டோவில்  சிரிக்காமல் இருந்தாலும் பரவா
யில்லை  அழுகாம  இரு..”  என்று என் அப்பா  அதட்டி 
இருக்க வேண்டும். 

தவிர  எங்களுக்கு எதிரே பளீரென்று விளக்குப் போட்டு  கருப்புத் துணிக்குள்  தலையை  நுழைத்துக் கொண்டு 
நிற்கும்  அந்த காமிரா  மாமாவைப் பார்க்கும் போது  
ஏதோ மந்திரவாதியைப் பார்ப்பது  போல்  இருந் திருக்க
லாம்.

 எனக்கு  அந்த  மூன்று சக்கர  சைக்கிள்   மிகவும் 
பிடிக்கும். அப்போது  அப்பா  சேலத்தில்  சைக்கிள்  
கடை  வைத்திருந்தார்.  அவர் கடைக்கு  இந்த  சைக்கிள்  
பழுதுபார்ப்பதற்கு  வந்திருந்தது.  அதை நான்  சில 
நாட்கள் ஓட்டிக் கொண்டிருந்தேன்.

 சைக்கிளை  ஓட்டவிடாமல்  அந்த  காமிரா  முன்னால் 
அசையாமல்  உட்காரச் சொன்னது   எனக்கு பிடிக்க வில்லை. அப்பாவின் கண்டிப்புக்காக  அசையாமல் உட்கார்ந்திருக்கிறேன்.

இந்தப் புகைப்படம்  சுமார்  75 ஆண்டுகளுக்கு  முன் எடுத்தாலும்  அதை எடுத்தவரின்  தொழில் நேர்த்தியை 
நிச்சயம் பாராட்ட வேண்டும்  .அப்போதைய  காமிராவில் 
மிகக் குறைவான  நுணுக்கங்களே இருந்தன.. இதை இயக்குவதற்கு  தீவிரமான  மனப் பயிற்சி வேண்டும்  

லென்ஸை  சரியான நேர அளவுக்கு  சில வினாடிகளுக்கு கையால் திறந்து மூட வேண்டும்   இந்தக்  கைத்திறமை 
ஒரு தியான நிலைக்கு  சமமானது.

எண்பது  வருஷங்களுக்கு  பிறகு  நம்மையே   நாம் 
திரும்பிப் பார்த்துக்  கொள்ளும்போது  நமது  வாழ்வின் ஆச்சரியமான  பரிணாமமும்  புதிரும்  வளர்ச்சியின் 
அரூபமான  ஒழுங்கும்   தீராத  நெகிழ்ச்சியைக் 
கொடுக் கின்றன.  ஏதோ  ஒரு  மகாசக்தியின்  விசால
மான கருணையை நினைக்கத்  தூண்டுகிறது



Monday, June 27, 2016

சுய ரூபம்

சுய  ரூபம்


வைதீஸ்வரன்
 (*கல்கி  ஜூலை 2016இதழில் வெளிவந்துள்ளது)

வானத்தைக்  கையில்  பிடிக்க  முடியுமாஎன்று 
யாரோ  கேட்டது  நினைவுக்கு  வருகிறது  இன்று 
வானத்தைக்  கண்ணால்  அளக்க   முடியாமல்
குனிந்து  கொண்ட போது
வேளைக்கு  வேளை
வானம்  பிடிக்கு நழுவுகிறது.  காணாமல்  போகிறது.
 மாறு வேஷத்தில்
என்னை  ஏய்க்கிறது.
 கிட்ட  வருவது  போல்  பாவனை  செய்கிறது
இரவில்  எங்கோ  தொலைந்து  போய் விடுகிறது.
நிலவைப்  பார்க்கும் போது
உலரும் நீலத்துணி  போல்  மிதக்கிறது.
எரிக்கும்  பகலில்  என்னை  வெறித்துப் பழுப்பாக   நோக்குகிறது. 
சூரியன்  விழும் போதும்  எழும்போதும்
 சோகம் ராகம் போலும் 
ஒரு கதகளிக்காரனின்
 ஜாஜ்வல்யமான ஆட்டத்தைப்  போலி  செய்தும்
 பறவைகளைக் குழந்தைகளாக்கிக்  கூச்சலிடச்  செய்கிறது!!.
மழைக்குள்  பதுங்கியும்
பனியில்  நடுங்கியும்
 புயலில் பூதங்களாகி
 சடைகளால் திசைகளை விரட்டி
 நெருப்புவிழிக்  கீறலாய்   திறந்து மூட
 பூமியைத்  தோலுரிக்கிறது
 சில  பருவங்களில்  வளைந்தது   போலவும்
 சில  பருவங்களில்  விலகி  துறந்தது  போலவும்
  யோசிக்க  வைக்கிறது...
துக்க நினைவுகளில்  மணல் வெளியில்
மனம் கிடந்து  தேம்பும்  கணங்களில்
என்  மேல் பரந்த  பட்டுக் கருமை போர்த்தி  அரவணைக்கிறது
 இந்த   வானத்தின்  சுய ரூபம் தான்  என்ன?
 சுயமே  அற்ற  ஞானம்  தான்  வானமா?   
   எனக்குள்  ஒரு  வானம்  இருக்கக்  கூடுமா?
   என்  ரூபம்  ரூபமற்றுப்     போகும்போது
   நானும்  அந்த  வானமா?................




Monday, June 20, 2016

(கசங்கிய டைரிக்குள் கண்டெடுத்த ஒரு கவிதை 1959) கடலுக்கு சில வார்த்தைகள்

(கசங்கிய  டைரிக்குள்  கண்டெடுத்த  ஒரு  கவிதை  1959)

கடலுக்கு சில   வார்த்தைகள்
 
வைதீஸ்வரன்


                யுகயுகமாய் முதிர்ந்து
                நரைத்த வெள்ளக் கூந்தல் 
                 பூமித் தரையில்  அலைபாய
                ஆழ் மனதில் திமிங்கல சிந்தனைகளை
                தூங்க வைத்து
                நட்ட நடு வெளியில் 
                ஊழிக்காலம்  தவமிருக்கும்
                தற்பரமே  --நீ வாழ்க.

                 அகன்ற  நெஞ்சு நிறைய
                 வான் முழுதும் உள்வாங்கி
                 தன் மீன்கள் விண்மீன்களுடன்
                 கலந்து  விளையாட
                  எல்லையறற  கருணையால்
                 உயிரைப் போர்த்திக்  காக்கும்
                நீலப் பேரழகே   -- நீ வாழ்க

                ஊழிக் காலமாய்
                ஓய்ச்சலின்றி
                 வாழ்வுப் பொருளை
               உலகக் காதுகளில்  ஓதி ஓதி
               எதிரொலித்தும்
               மொழி பேதத்தால் 
               அது பேரிரைச்சலாகப் படும்
               உலகப் பேதமையால் உள்ளம் குமுறியும்
               பொறுமையாய் புவியை அடைகாத்து நிற்கும்
               ஆகாயப் பறவையே  
                நீ அன்புடன் வாழ்க  !