vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Tuesday, December 22, 2015

சிலுசிலுக்கும் வாழ்வு - வைதீஸ்வரன்



சிலுசிலுக்கும்  வாழ்வு
வைதீஸ்வரன்


இங்கே
சில மரங்கள்   கூட்டமாக 
சளசளக்கின்றன..
அங்கே
சில மரங்கள்  ஆர்ப்பாட்டமாக
கிளையாட்டிக்  கூச்சலிடுகின்றன...
தூரத்தில்  சில  நெட்டை  மரங்கள்
 வானம்  பற்றிய  வழக்கமான சேதிகளை
வளைந்து  வம்படித்துக்   கொண்டுள்ளன

 ஊர்க்காற்றில்  வந்த சில
உருக்கமான கதைகளின்  வருத்தத்தில் 
 வேறு  சில  வயதான மரங்கள்   
 இலைகளைக் கவலையுடன்   உதிர்த்து
  மருகிக்  கொள்கின்றன  தன்னளவில்.

கும்பலாகத்  தலையாட்டி. அதோ...அங்கே
பள்ளத்தாக்கில்  சில பழங்கால  மரங்கள்
நேற்று  வந்த  பொல்லாப் புயலை
தாங்கித்  தாக்கித்  துரத்திய  பெருமையை
 சொல்லிச்  சொல்லி  மாளாமல்
இறுமாந்து   கொள்ளுகின்றன

மெலிந்து  நீண்ட வழவழப்பான
 நளினக்கிளைகளை  ஆட்டி
 பறவைகளைப்  பாட  வைத்துப்
 பூச்சூடி
அந்தரத்தில்  அபிநயிக்கும்
 சில கன்னிக்  கொடிகள்.......
பகலிரவாய்  ஓடைப்பள்ளத்தில்
ஊன்றி  நிற்கும் 
 சில மொட்டைமரங்கள்
வெட்டுப்பட்டுத்  தரையில் கிடக்கும்
  தன் துண்டுக்கிளைகளைக் கண்டு
துக்கம்  அனுசரிக்கின்றன

ஆனாலும்  பொதுவாக யோசிக்கும்போது 
வியக்க வைக்கும்  நற்குணமொன்று
இருக்கும்  போலிருக்கிறது
  இந்த  மரங்களுக்கு ?

 நட்டு வைத்த 
 நகரமுடியா  பிறப்பைப் பற்றி 
எந்த மரங்களும்  அலுத்துக் கொள்வதில்லை
வானத்தை வியந்து கொண்டே வாழ்கின்றன

தளம் - டிசம்பர்  2015
....
..


No comments:

Post a Comment